Monday, 22 June 2009

இறைவனின் அருட்கொடை



இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

செவ்வாய், 05 ஆகஸ்ட் 2008

மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவே, (அதில் தோல்வியடைந்தவர்கள் அல்லது வெற்றி பெற்று நேர்வழியில் வாழ்பவர்கள் ஆகிய இரு சாராரும்) இருப்பது யதார்த்தமான ஒரு மனித இயல்பு ஆகும்.
இதற்கு மாற்றமாக விதி விலக்காக ஒரு சிலர் பாவங்களில் மூழ்கியும் அதை விட்டு விடுபடாமலும், அதையே தொடர்வது இருப்பினும் ஏதாவது ஒரு நேரம் அதை நினைத்து வருந்திடாமல் இருக்கமாட்டார் என்பதை மறுக்க இயலாது. அவர் பாவமன்னிப்பு கேட்பது கேட்காமல் இருப்பது என்ற எந்த நிலையில் இருப்பினும் புத்தி சுவாதீனமுடன் இருப்பின் அவர் இதை தமது வாழ்வில் ஏதேனும் ஒரு கணமாவது நினைத்து வருந்தி பச்சாதாபப்படாமல் இருக்க மாட்டார். 




ஆனால் ஒருவர் தாம் செய்வது பாவம் என்று அறியாமல் அதை தொடரும் போது அதை நன்மையென்று கருதி பலரும் செய்வதைக் காணும் போது அதை ஒரு தவறு என்று கூட கருதாமல் மார்க்க காரியம் எனும் அடிப்படையில் செயல்படும் போது அவர் அந்தச் செயல்களுக்குப் பாவமன்னிப்பு கேட்கும் வாய்ப்பே இல்லாத நிலையில் மரணித்து விடுகிறார் என்பது மிகப் பெரிய இழப்பு என்பதில் ஏதும் சந்தேகமில்லை. 

இஸ்லாம் எனும் தூய்மையான இறைமார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட எவ்வித சேர்க்கைகளும் நீக்கங்களும் மாற்றமும் தேவையற்ற நிகரற்ற உன்னதமான ஓர் இறை மார்க்கமாகும். இதை அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை பார்க்கவும்:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينا


...இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.. (அல்குர்ஆன் 5 :3)



ஆனால் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பல்வேறு புதிய விழாக்கள், சிறப்பு மிக நாட்கள் மற்றும் அந்நாட்களில் செய்ய வேண்டிய நல்ல அமல்கள் (விசேஷ தொழுகைகள், நோன்புகள், திக்ருகள் போன்றவைகள்) நபி வழிக்கு மாற்றமாக ஒரு சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மார்க்கமாகவும் நன்மையானதாகவும் கருதி பயபக்தியுடன் செயல் படுத்தப்படுகின்றன. 

உதாரணத்திற்கு ஷஃபான் எனும் இஸ்லாமிய ஆண்டின் 8 வது மாதத்தில் செய்யப்படும் மார்க்க அனுஷ்டானங்கள், ஷபே பராஅத் மற்றும் மரணித்தவர்களுக்குப் பாவமன்னிப்பும் நன்மையும் சேர்க்க ஓதப்படும் பாத்திஹாக்கள் போன்ற இவற்றிற்கு குர்ஆனிலோ நபிவழியிலோ ஆதாரம் இல்லாததால் இவை நப(ஸல்) அவர்கள் எச்சரித்த நரகில் கொண்டு சேர்க்கும் பித்அத்துகள் ஆகும். 


நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை:




"வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது (பித்ஆத்) புதுமையாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடு; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்" (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி.)



"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே". (புகாரி, முஸ்லிம்)






இவற்றை முஸ்லிம் சமுதாயம் உணரத் தவறுகின்றது; கடமையான தொழுகைகள், சுன்னத்தான நபிலான நோன்புகள், குர்ஆன் ஓதுதல், தர்மம் வழங்குதல் போன்ற உறுதியான நன்மைகளில் பாராமுகமாக இருப்பவர்களும் கூட இத்தகைய பித்அத்களில் மிகுந்த அக்கறையோடு ஈடுபடுவதை காணமுடிகிறது. நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகுக்கு மார்க்கத்தைப் போதிக்க, கற்று கொடுக்க, நன்மை தீமைகள் எவை என்பதை அறிவிக்க அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான இறைத்தூதர் என்பதையோ, அவர்களுடைய அழகான வழிகாட்டுதல்கள் நம்மிடம் ஆதார பூர்வமான ஹதீஸ்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதையோ இவர்கள் அறிவதும் உணர்வதும் இல்லை என்பது கைச்சேதமே.

மோசடிகாரன், கொலைக்காரன், கொள்ளையடிப்பவன், மதுவருந்தும் (குடிக்கும்) பழக்கமுடையவன், திருடுபவன், விபச்சாரம் புரிபவன், வட்டி போன்ற தவறான முறையில் பொருளீட்டுபவன் போன்றவர்கள் தமது பாவங்களுக்கு மனம் வருந்தி அவற்றை கைவிட்டு மன்னிப்பு கேட்டு அல்லாஹ் நாடினால் நரகம் செல்வதில் இருந்து தப்பிவிட ஒருவேளை வாய்ப்புண்டு இன்ஷா அல்லாஹ்..

ஆனால் தொழுது, நோன்புகள் வைத்து இதர நல்ல காரியங்கள் செய்து அத்துடன் இது போன்ற நபி வழிக்கு மாற்றமான காரியங்கள் செய்து அது பாவம் என்று மனம் வருந்திடும் சிந்தனையும் பெறாத வகையில் ஷைத்தான் முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலோரை வழிகெடுத்து நரகத்திற்கு அழைத்து செல்வதில் வெற்றி காண்கிறான் என்பதும் வேதனைக்குரிய உண்மை. அல்லாஹ் மனிதன் தூய்மையாக மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்பதை வலியுறுத்தியுள்ளான். மேலும் இதை அங்கீகரிக்கின்றான் என்பதை கீழ்வரும் குர்ஆன் வசனத்தில் காணலாம்.




قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لاَ تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعا ً إِنَّه ُُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ




"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நபியே!) நீர் கூறுவீராக.. (அல்குர்ஆன் 39 :53)




நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி) 



மேலும் குர்ஆனில் அல்லாஹ்வின் எச்சரிக்கை:




எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் 4 : 115 )


மேலே கூறப்பட்ட உலகில் அனைவரும் பாவம் என்று கருதிடும், தெளிவான இதர பாவங்களை அறிந்து அவற்றிலிருந்து தங்களை தடுத்து தவிர்த்து கொள்வது போல், அல்லது தாங்கள் அறியாமல் செய்த எத்தனையோ பாவங்களை நினைத்து வருந்தி அவற்றை முறையாக கைவிட்டு பாவமன்னிப்பு கேட்பது போல், அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் நபி வழிக்கு மாற்றமான இது போன்ற பித்அத்துகளின் தீங்கையும் உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.



இது போன்ற பித்அத்துகளின் தீங்கை உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்டு இவற்றை கைவிட்டு முழுமையாக நபி வழியில் நடப்பதே, இவற்றை மார்க்க காரியம், நன்மையான அமல் என்று கருதியதால் பாவமன்னிப்பு கேட்கும் வாய்ப்பையும் இழந்து, மறுமையில் மிகப்பெரும் நஷ்டமடையும் நிலையில் உள்ள முஸ்லிம்களின் பெருங்கடமை என்பதை இந்த ஷஃபானில் உணர்ந்து இவற்றை உடன் கைவிட்டு, முழுமையாக நபிவழியில் நடந்து பாவமன்னிப்பும் கேட்டு ஈடேற்றம் பெற்றிட அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்.

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْأَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرا ً كَمَا حَمَلْتَه ُُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِه ِِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ .


"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; நிராகரிப்பாளர்களின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்குர்ஆன் 2:286)


ஆக்கம்: இப்னு ஹனீப்.

நன்றி 

சத்தியமார்க்கம்.காம் 

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...