iuml & tmmk |
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தத்தமது கட்சிகள், இயக்கங்கள், மத/சாதி சார்ந்த அமைப்புகள் அனைத்தும் முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இந்த தேர்தலில் சற்று வித்தியாசமாக தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தான் முடிவுகள் வரும் என்பது ஒரு வியக்கத்தக்க விஷயம். ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும், தொகுதி பங்கீடுகளை அலசி ஆராய்ந்து தங்களது கூட்டணியை பலுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க உதிரி கட்சிகள்-இயக்கங்கள், மத- சாதி சார்ந்த கட்சிகள் –இயக்கங்கள் தங்களின் நிலையை உறுதிபடுத்திக் கொள்ளவும், தமிழக அரசியலில் புதிதாக கால் பதிக்கவும், கால் பதித்தவர்கள் உறுதியாக நிற்கவும் முயற்சி செய்கின்றனர்.
சிறுபான்மை என்று சொல்லப்படுகின்ற முஸ்லீம் சமுதாயமும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் இருவகையான பிரிவுகள், இரு கட்சிகளாக போட்டியிடுகின்றனர்.
1. இந்திய யூணியன் மூஸ்லீம் லீக் – திமுக அணி
2. மனிதநேய மக்கள் கட்சி – அதிமுக அணி
சமுதாயத்தின் எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்காமல் சட்டமன்றத்தின் சீட்டுகளுக்காகவே இந்த இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவது என்பது கிடைக்கின்ற இரண்டு அல்லது மூன்று சீட்டுக்காக சமுதாயத்தை அடகு வைப்பது போல் ஆகிறது எபது நடுநிலையாளர்களின் எண்ணம். நமக்கு கிடக்கின்ற இரண்டு அல்லது மூன்று சீட்டிற்காக தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் நம் சகோதரர்கள் களப்பணி ஆற்ற வேண்டும், நம் ஒட்டுமொத்த சமுதாயமும் எல்லா கட்சியை சேர்ந்த வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்.
கூட்டணி தர்மத்திற்காக இவ்வாறு செய்கிறோம் என்று கூறுபவர்கள் ஒற்றுமையாக ஒரே அணியில் நிற்கலாமே, கோரிக்கைகள் அல்லது நிபந்தனைகள் வைக்காமல் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது சமுதாயத்திற்கு நலன் பயக்காது என்ற வாதம் உண்மையென்றாலும் கூட குறைந்தபட்சம் சமுதாயத்தின் ஒருமித்த குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இரு கட்சிகளும் தங்களுக்குள் பேசி ஒரே அணிக்கு ஆதரவு தெரிவித்து தாங்கள் ஒற்றுமையை விரும்புபவர்கள் என்று முன்னுதாரணமாக திகழலாம். அது ஒட்டு மொத்த முஸ்லீம்களின் ஒற்றுமையை தமிழகத்திற்கு பறைசாற்றும்.
தோழமையுடன்
அபு நிஹான்
ஒன்றிரண்டு சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் சமுதாயத்தை அடகு வைத்ததே இந்த இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்களின் சமீபத்திய சாதனை.
ReplyDelete