அஸ்ஸலாமு அலைக்கும்.
புனித ரமலான் மாதத்தில் நோண்புகள் நோற்று இரவுத் தொழுகையை சிறப்புடன் நிறைவேற்றி பெருநாளுக்காக காத்து இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் மற்ற அனைத்து முஸ்லீம்களுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்கள். இந்த பெருநாள் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக பெருநாள் இரவில் இருந்தே சகோதர சகோதரிகள் தங்களின் கொண்டாட்டங்களை திட்டமிட்டு செய்கின்றனர். ஆனால் கொண்டாட்டமானாலும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவது என்பது அனைவருக்கும் தடுக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களில் சில:
சிலர் நோண்பு காலங்களில் “மறந்து இருந்த மதுவை” பெருநாள் இரவு அன்றிலிருந்தே குடிக்க ஆரம்பிக்கின்றனர். எந்த அளவுக்கு என்றால் நோண்புடைய காலங்களிலேயே இதற்கான திட்டமிடல் நடந்து கொண்டிருக்கின்றது. எந்த தக்வாவை அடைய வேண்டும் என்று நாம் நினைத்து நோண்பு நோற்றோமோ அதற்கு மாற்றமாக மது அருந்தி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
சிலர் நோண்பு காலங்களில் தொலைக்காட்சியில் சினிமா, பாடல்கள், நாடகம் போன்ற காரியங்களை விட்டும் தங்களை தற்காத்து கொள்வர். பெருநாள் இரவு அன்றே அதற்கு மூட்டை கட்டி விட்டு மீண்டும் சினிமா, பாடல் என்று தொலைக்காட்சி பக்கம் தங்களின் ஆர்வத்தை திசை திருப்பி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
சிலர் பெருநாள் இரவு முழுவதும் கண் விழித்து தெருக்கள்தோரும் கலர் தாள்கள் கட்டி, டியூப் லைட்டுகள் எரிய விட்டு இறைவனுக்கும், அவன் தூதருக்கும் விருப்பமில்லாத வீண் காரியங்கள், வீண் வீறயம் போன்ற செயல்களில் தங்களின் கவனத்தை செலுத்தி தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
சிலர் பெருநாள் இரவு முழுவதும் ஊர் சுற்றி விட்டு உடைகள் வாங்கி விட்டு, முப்பது நாட்கள் தொழுத இரவுத் தொழுகையை அன்று இரவே விட்டு விட்டு, காலை பஜ்ர் தொழுகையையும் விட்டு விட்டு நன்றாக உறங்கி விட்டு காலையில் அவசரமாக பெருநாள் தொழுகையை தொழுது முடிக்கின்றனர்.
பெண்களில் சிலர் பெருநாள் இரவு வெட்டி பேச்சுகளில் ஈடுபட்டு புறம், கோள் ஆகிய பாவங்களை செய்து புனிதமான மாதத்தில் செய்த அனைத்து நல் அமல்களும் பாழ்படுத்துவது போல் தங்களுடைய மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்.
பெருநாள் என்பது கொண்டாட வேண்டிய தருணம் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இஸ்லாம் சொல்லித்தந்த வழியில் கொண்டாட வேண்டும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட வழியில் பெருநாளின் இரவிலோ அல்லது பெருநாள் அன்றொ கொண்டாடுவது கூடாது. இது பெருநாள் அன்று மட்டுமோ அல்லது அன்று இரவு மட்டுமோ கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் இல்லை. மாறாக நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள். சிலர் நோண்பு முழுவதும் இபாதத்துகளைக் கொண்டு தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர். உண்மையில் இந்த பயிற்சி ரமலான் அல்லாத காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே இதன் குறிக்கோள், மாறாக தன்னுடைய அடியானை பசித்திருப்பதாலும், விழித்திருப்பதாலும், ஆசை, வீண் காரியங்களில் இருந்தும் விலகி இருப்பதாலும் இறைவனுக்கு ஒரு பலனும் இல்லை. மனித வாழ்வில் பல தவறுகளை செய்து கொண்டிருக்கும் மனிதன் தன்னுடைய மனோ இச்சைகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் மனித வாழ்வுக்கென்று வகுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி அவனுடைய வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் ஆசை. அதை நிறைவேற்றும் விதமாக நோண்பை ஒரு பயிற்சி களமாக ஆக்கி அதன் மூலம் மனிதன் நேற்வழி பெற்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக நோண்பு நோற்றவர்களுக்கு மட்டுமே இது உண்மை பெருநாளாக இருக்கும்.
அல்லாஹ் இந்த நோண்பு மூலம் தக்வா என்னும் இறையச்சத்தை நாம் அடைய அருள் புரிவானாக
தோழமையுடன்
அபு நிஹான்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்