நம் சமுதாய மக்கள் சிலருக்கு இன்னும் பொறியியல் / மருத்துவக் கல்லூரிகளில் சேருவது என்பது பெரும் மலைப்பாக இருக்கும். கிராமத்தில் படிக்கும் மாணவமணிகளுக்கு எந்த கல்லூரியில் சேர வேண்டும், எந்த பாடத்தில் சேர வேண்டும் என்பதில் பெரும் சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். பொறியியல் கல்லூரி கலந்துரையாடல் என்றால் என்ன? அதற்கு எப்படி நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றி கீழே காண்போம்.
கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. 'அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.
ஊரில் பஸ் ஏறி நேராக கோயம்பேடுக்கு வருபவர்கள், பஸ் நிலையத்திலேயே குளித்துவிட்டு பெட்டி, படுக்கையோடு கேம்பஸுக்கு வந்துவிடுகிறார்கள். காலையிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துவிடுவதால் எங்கும் தங்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. மாலைக்குள் குறைந்தது 3500 பேரின் எதிர்காலம் கவுன்சிலிங்கில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. விரும்பிய கல்லூரியும், படிப்பும் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக இரவே ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.
கை நடுங்கிக் கொண்டே படிவங்களை பூர்த்திச் செய்கிறார்கள் மாணவர்கள். “ஒருவேளை தப்பாயிடுமோ?”. நகரங்களில் படித்தவர்களுக்கு இதுமாதிரி தயக்கமெல்லாம் ஏதுமில்லை. அவர்களுக்கு இந்த கவுன்சலிங் கலாச்சாரம் அன்னியமானதாகத் தெரியவில்லை. அண்ணனோ, பக்கத்து வீட்டு அக்காவோ ஏற்கனவே வந்திருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று அவர்களை விசாரித்து அறிந்து தெம்பாக வருகிறார்கள். பாவம், கிராமப்புற மாணவர்கள்தான் முதன்முதலாக பார்லிமெண்ட் கட்டடத்துக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் எம்.பி. மாதிரி தயக்கத்தோடு அஞ்சுகிறார்கள்.
கடந்த ஆண்டு பொருளாதார மந்தம் காரணமாக ஐ.டி.துறைக்கு மவுசு குறைந்து இருந்ததாக ஒரு பார்வை தென்பட்டது. இப்போது மீண்டும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மீண்டு எழுந்திருப்பதால் மாணவர்கள் பலருக்கும் ஐ.டி.யே சரணம். அடுத்ததாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் துறைகளுக்கு போட்டா போட்டி நடக்கிறது.
பல்லாயிரக் கணக்கில் திரண்டு வருபவர்களுக்கு வசதிகள் பரவாயில்லை. கேண்டீனில் தங்குதடையின்றி உணவு கிடைக்கிறது. ஆங்காங்கே சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர்வசதி. வேறு என்ன வேண்டும்?
கவுன்சலிங் என்பது என்ன?
மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.
கவுன்சலிங் எப்படி நடக்கிறது?
• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.
• பணம் கட்டிய வரிசையே உங்களை ஒரு கூடத்துக்கு அழைத்துச் செல்லும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை பிரிவு பிரிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்களை கவுன்சலிங்குக்கு ஒலிபெருக்கியில் அழைப்பார்கள்.
• மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் கவுன்சலிங் நடைபெறும். உள்ளே மாணவரோடு, பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்லலாம். கவுன்சலிங் கூடத்தில் நுழைந்ததும், உங்கள் வருகையைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் கவுன்சலிங் முடியும் வரை உள்ளே நுழைந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை.
• மிகப்பெரிய திரையில் காட்டப்படும் காலியிடங்களில் மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்தாய்வின் போது மாணவர்கள் தெரிவு செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட இயலாதது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
• சான்றிதழ் சரிபார்க்கும் இடத்தில் உண்மையான சான்றிதழைக் காட்ட வேண்டும். ஜெராக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
• இறுதியாக நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த கல்லூரி பாடப்பிரிவுகளில் ஒன்றை, கணினியின் முன் அமர்ந்திருக்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
• கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டுப் படிவமும், மீதம் செலுத்த வேண்டியத் தொகைக்கான வங்கிப் படிவமும் வழங்கப்படும். பணத்தை அன்றே செலுத்தலாம். அல்லது கல்லூரிக்குச் சென்றும் செலுத்தலாம்.
• ஒரு சிறிய மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.
கவுன்சலிங்கில் வெற்றி பெற...
சில முன் தயாரிப்புகளோடு போனால் – அதாவது ஹோம்வொர்க் செய்தால் – கவுன்சலிங் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
1. என்ன படிப்பு, எந்த கல்லூரியில் என்பதை முன்கூட்டியே எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமை, ஆர்வம், மனோபாவம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் படிப்பினைத் தேர்ந்தெடுங்கள். எல்லோரும் என்ன படிக்கிறார்களோ அதையே நாமும் படிப்போம் என்றோ அல்லது வெறும் வேலை வாய்ப்பு அடிப்படையில் மட்டுமோ என்றோ தேர்ந்தெடுக்காதீர்கள். நான்கு வருடத்தில் வேலைச்சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
2. கல்லூரியை தெரிவு செய்வதற்கு முன்பாக அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், தொழிற்துறையோடு அக்கல்லூரி வைத்திருக்கும் உறவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/ இணையத்தளத்தில் இவ்விவரங்களை விலாவரியாக காணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்பும் துறையில் கடந்த செமஸ்டரில் எத்தனை பேர் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்தத் துறையில் அக்கல்லூரி எப்படி என்பதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளலாம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே உள்ள படிப்புகளில் எது சிறந்தது என்பதை கண்டுபிடியுங்கள்.
3. நீங்கள் விரும்பும் படிப்பு அல்லது கல்லூரி கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் உங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பங்களை முன்னதாகவே தெரிவுசெய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரேங்க், கட்-ஆஃப், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உத்தேசமாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டின் ரேங்க் லிஸ்ட் கட்-ஆஃப் பட்டியலைக் கொண்டு ஒரு ஐடியா கிடைக்கும். ஆனால் இது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. வருடத்திற்கேற்ப சிலபல காரணிகளால் மாறக்கூடும். இதைக் கண்டுபிடிக்க சில இணையத்தளங்கள் உதவும்.
உதாரணம் : http://collegesintamilnadu.com/Counseling/TNEA_Cutoff_Search.asp.
உங்கள் மொத்த மதிப்பெண், விரும்பும் படிப்பு, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா என்ற விபரங்களைக் கொடுத்தால் இந்த இணையதளங்கள் எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சொல்லும். ஆனால் இதெல்லாம் உத்தேசமாக ஒரு ‘ஐடியா’வுக்குதான்.
4. கவுன்சலிங் தொடங்கிய பின்பு ஒவ்வொரு நாள் இரவும் http://www.annauniv.edu/tnea என்ற இணையத் தளத்தில் எந்தக் கல்லூரியில், எந்தப் பிரிவில் எவ்வளவு இடம் நிரம்பியிருக்கிறது போன்ற தகவல்களை உடனுக்குடன் ஏற்றி வைப்பார்கள். இதைத் தொடர்ந்துக் கவனித்து வந்தாலே, உங்கள் முறை வரும்போது என்ன நிலை இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து தெரிந்துக் கொள்ளலாம்.
எழுதுவதற்கு பெரிதும் துணை புரிந்த புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு நன்றி
தோழமையுடன்
அபு நிஹான்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்