சகோதர சகோதரிகளே, இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!
தலைப்பை படித்தவுடன் முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது பற்றி இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். இதில் அரசாங்க கல்லூரிகளின் சலுகைகள் பற்றி, நம்மவர்கள் அதில் கவனம் செலுத்தாதது பற்றியும் விரிவாக காணலாம். சமீபத்தில் நான் படித்த செய்தி இந்த பதிவு எழுதுவதற்கு உந்தியது.
அந்த செய்தி: அரசு கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
2010-11-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்.சி. போன்ற முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து கட்டணம் ரத்து தொடர்பான கருத்துருவை கல்லூரி கல்வி இயக்குனர் அரசிடம் சமர்ப்பித்தார்.
இதை பரீசிலனை செய்த பின் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2010-11-ம் கல்வியாண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலை அரசு முதன்மை செயலாளர் கணேசன் தெரிவித்தார்.
நன்றி: ததஜ இணையதளம்
இன்றைய சமுதாய நிலை:
இன்று முஸ்லீம்களிடேயே பரவலாக காணப்படும் ஒரு வருந்தத்தக்க விஷயம் தங்களுடைய மகன்/மகள் தனியார் கல்லூரியில் படித்தால் தான் தங்களுக்கு கவுரவம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் உன்மை என்ன?
தனியார் கல்லூரியில் படித்தால் படிப்புக்கு பல ஆயிரங்கள் / லட்சங்கள் செலவு செய்தது போக கல்லூரி கட்டட விரிவாக்க கட்டணம், கனிப்பொறி கட்டணம், ஆய்வறை (Laboratory) கட்டணம், என்று சொல்லி சில கல்லூரிகள் வசூல் செய்து விடுகின்றனர். பொறியியல் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர்கள் கலந்துரையாடலுக்கு (Counseling) அழைக்கப்படுவதால் அவர்கள் மட்டும் அரசு கல்லூரியில் சேர விரும்புகின்றனர். மேற்படிப்பு படிக்கும் சில முஸ்லீம் மாணவர்கள் கூட தங்களின் திறமையின் அடிப்படையில் IIT, IIM, அரசு கல்லூரிகளில் சேர விருப்பம் காட்டாததும், அதனுடைய அறிவு மாணவர்களிடம் இல்லாததும், பெற்றோர்களும், குடும்பத்திலுள்ள படித்தவர்களும் அதற்கு வழிகாட்டாததும் வருந்தத்தக்கதே. 10% இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்தியா முழுவதும் இறைவனின் அருளால் கிடைத்தாலும், அதை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நம் சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவதும் நம் இயக்கங்களின் மீதும், சமூக ஆர்வலர்கள் மீதும், நம் சமுதாய மக்கள் மீதும் கடமை என்பதை மறந்து விடாதீர்.
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை |
இந்திய தொழில்நுட்ப நிறுவணம், சென்னை |
சமீபத்தில் எடுத்த கருத்து கணிப்பு:
மொத்தம் இந்தியாவில் 15 ஐஐடிகளில் உள்ள 9500 இடங்களுக்கு 13,104 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதில் 2,357 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (முஸ்லிம்களையும் சேர்ந்து).
ஐஐடி-டில் முஸ்லிம்களையும் சேர்த்து பிற்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு உள்ளது. அதாவது 2565 இடங்கள் பிற்பட்ட வகுப்பினருக்கு உள்ளது ஆனால் தேர்வானதோ 2,357 பேர் மட்டுமே.
இடஒதுக்கீடு மூலம் நமக்கு கிடைக்கும் இடங்களின் 200 இடங்களுக்கு மேல் வீணாக போகின்றது.
நன்றி : ததஜ இணையதளம்
சமுதாய இயக்கங்களே, முதலில் அரசாங்க பள்ளிகளில், கல்லூரிகளில், IIT, IIM போன்ற நிறுவணங்களில் சேர்ந்து படிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆதாயங்களை/பயன்களை சமுதாய மக்களுக்கு எடுத்துரையுங்கள். குடும்பத்தில் படித்த மூத்தவர்கள்/ சமூக ஆர்வலர்கள் இதை அனைவருக்கும் புரிய வையுங்கள்.
நம்மிடம் பொருள் (செல்வம்) இருக்கிறது என்பதற்காக வீண் விரயம் செய்வதும் நமக்கு தடுக்கப்பட்டுள்ளது.
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31).
உண்மையில் அரசாங்க கல்லூரியில் படிப்பது கேவலம் இல்லை, மாறாக நன்றாக படிக்கும் மாணவர்களே அரசாங்க கல்லூரியில் சேர முடியுமென்பதே நிதர்சனமான உண்மை. ஆக இளநிலை படிக்க இருக்கும் மாணவர்கள் பள்ளியிலும், முதுநிலை படிக்க இருக்கும் மாணவர்கள் இளநிலையிலும் நன்மதிப்பை பெற்றால் தான் அரசாங்க கல்லூரியிலும் சேர முடியும்.
இதில் வேதனை தரும் செய்தி என்னெவென்றால் நம் சகோதர சகோதரிகள் பலர் நன்மதிப்பை பெற்றிருந்தும் அரசு கல்லூரியில் சேராமல் நம் சமுதாய கல்லூரியாக (பெரும்பாலும் தனியார் கல்லூரியாக) பார்த்து சேர்ந்து படிப்பது நம் சமுதாயத்தில் வாடிக்கையாகி விட்டது. இதனால் நமக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் வேறு ஒருவர் படிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதற்கு (தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கு) ஆகும் சிலவை பற்றியோ, அரசாங்க கல்லூரியில் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியோ நாம் இன்னும் அறியாமல் இருப்பது வருந்த்தத்தக்கதே. அரசாங்க கல்லூரியில் படிப்பதால் கிடக்கும் பலன்கள்:
1. குறைந்த கட்டணம்
2. அனைவருக்கும் உதவித்தொகை
3. குடும்பத்தில் முதல் பட்டதாரியென்றால் அதற்கும் உதவித்தொகை
4. பேருந்துக்கென்று கட்டணம் வசூலிக்காமல் அரசாங்க பேருந்தில் செல்வதற்கு குறைந்த கட்டண பாஸ்.
5. மேற்படிப்பு (M.A., M.Sc) போன்ற படிப்புகளுக்கு கல்வி கட்டணம் ரத்து
6. IIT, IIM போன்ற நிறுவணங்களில் படித்தவுடன் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் கிடைக்கும் வேலை.
7. நன்றாக பாடங்களை சொல்லி தரக்கூடிய ஆசிரியர்கள். (தனியார் கல்லூரிகளில் படித்து முடித்த பழைய மாணவர்களே ஆசிரியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது)
மேலே சொன்னவைகள் அனைத்தும் மிகவும் சொற்பமே. நம் சமுதாய மக்கள் பலருடைய எண்ணம், நாம் தான் படிக்கவில்லை என்ன சிலவு ஆனாலும் நம் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறோம். தவறில்லை ஆனால் அரசாங்கள் நமக்கு கொடுக்கும் உரிமைகளை (கல்வி திட்டங்களை) நாம் அறியாமல் நம் குழந்தை படித்தால் போதும் என்று நாம் பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறோம். நாம் படிக்கும் மாணவராக இருந்தாலும், வழிகாட்டும் பெற்றோராக இருந்தாலும், அல்லது காப்பாளராக இருந்தாலும் நமக்குரிய கடமைகளை (கல்வி விஷயத்தில்) தெரிந்து கொள்வது அனைவரின் மீதும் கடமை.
நாம் மாணவராக இருந்தால்:
1. அரசாங்க கல்லூரியில் படிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அறிய முயற்சி செய்வதோடு அரசாங்க கல்லூரியில் சேர நல்ல மதிப்பெண்களையும், அதில் சேருவதற்காக நடத்தும் நுழைவுத்தேர்வுகளை பற்றி அறியவும் முயற்சி செய்ய வேண்டும்.
2. அரசாங்க கல்லூரியில் நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுத்து அதற்கு விண்ணப்பம் வாங்கி சரியான சமயத்தில் (விண்ணப்பிக்க கடைசி தேதியை அறிந்து) சமர்ப்பிக்க முயற்சி செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரியில் விண்ணப்பித்தல் நல்லது.
3. பொறியியல் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் IIT நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று அந்த கல்லூரிகளில் சேர முயற்சி செய்ய வேண்டும்.
4. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் IIT, மற்றும் IIM நடத்தும் நுழைவுத் தேர்விகளில் வெற்றி பெற்று IIT மற்றும் IIM இலும் மற்றும் புகழ்வாய்ந்த/பெயர்பெற்ற நிறுவணங்களில் (Reputed Institution) சேர முயற்சி செய்ய வேண்டும்.
நாம் பெற்றோர்களாக / காப்பாளராக இருந்தால்:
நாம் பெற்றோர்களாகவோ அல்லது காப்பளாரகவோ (Guardian) இருந்தால் மேலே சொன்ன விஷயங்களை அறிவதோடு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். மேலே சொல்லப்பட்ட விஷயத்தை பற்றிய அறிவு/தெளிவு உங்கள் மகன்/மகளுக்கு இல்லாமல் இருக்கலாம். நீங்கள் சிரத்தையெடுத்து உங்கள் மகன்/மகளை ஊக்குவித்து அவர்கள் அரசாங்க கல்லூரிகளில் சேர உதவ வேண்டும். உதாரணத்திற்கு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், அல்லது தரமான மையம் எதுவென்று தெரியாமல் இருக்கலாம் அல்லது தேர்வுக்கான புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களுக்கு உறுதுணையாக ஊன்றுகோளாக நாம் இருக்க வேண்டும். நீங்கள் படித்தவராக இருந்தால் அவர்களின் பாட சந்தேகங்கள், கல்லூரியில் சேர்வது சம்பந்தமாக ஆலோசனைகள், நுழைவுத்தேர்வு சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்குவதில் கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வு செம்மை பெற உதவுங்கள்.
பெரும்பாலான நம் சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நுழைவுத் தேர்வின் அவசியம், நுழைவுத் தேர்வின் விபரங்கள், அரசாங்க கல்லூரியில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள், IIT, IIM பற்றிய விபரங்கள் தெரியாமல் இருப்பதும் நம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே. ஆகையால் நீங்கள் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல் இதைப் போன்ற விஷயங்களை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
தோழமையுடன்
அபு நிஹான்
மேலும் ஏராளமான வாசர்களை உங்கள் பதிவுகள் சென்றடைய இந்த தளத்தில் பகிருங்கள்...http://writzy.com/tamil/
ReplyDelete