Sunday, 15 August 2010

சாலையில் அதிவேக பயணம் – ஒரு சமூக பார்வை

model accident
சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. 

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 50 கிலோ மீட்டர் வேகத்திற்குமேல் செல்வது சட்டப்படி குற்றம். அவ்வாறு சட்டத்தைமீறி அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டினால் வழக்கு தொடரப்படும். இரண்டு முறைக்கு மேல் வழக்கில் சிக்கினால் அவர்களது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். 

ஆர்டிஓ அலுவலகம் மூலம் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய தாமதம் ஏற்படுவதால் போலீசாரே அதனை ரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசை கோரியிருக்கிறோம். அரசு அது பற்றி பரிசீலித்து வருகிறது. அனுமதி கிடைத்ததும் அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும்.
இதே போல சாலைகளில் வேகமாக பைக் ஓட்டி அடிக்கடி விபத்துக்களை உருவாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 384 விபத்துக்கள் சென்னை நகரில் நடந்துள்ளன. இந்தாண்டு 2 விபத்து சம்பவங்கள் மட்டும் குறைந்துள்ளது. இதனை வெகுவாக குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

இவ்வாறு போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி, செய்தியாளர்களிடம் கூறினார். இது சில தினங்களுக்கு முன்னர் பத்திரிக்கையில் வந்த செய்தி. 

இதைப் போன்ற சம்பவங்களை நாம் படிக்கும் போது, வேகமாக செல்லும் சிலரால் யாரோ ஒருவர் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்க தோன்றும். ஆனால் என்னுடைய நண்பருக்கு நடந்த போது தான் அதன் பின்விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட வலியையும், தாக்கத்தையும், வேதனையையும் உணர முடிந்தது. 

நாங்கள் 4 நண்பர்கள் சென்னை பெரியமேட்டில் ரூம் எடுத்து அலுவலகங்களில் வேலை செய்து வந்தோம். மேலும் மாடியில் இன்னுமொரு ரூம் எடுத்து எங்களுடைய நண்பர்கள் தங்கி வேலை செய்து வந்தனர். டிசம்பர் 2004 ஒரு ஞாயிறு கிழமை எப்போதும் போல் தான் விடிந்தது. அன்று அலுவலகம் விடுமுறை என்பதால் எல்லோரும் நன்றாக உறங்கி விட்டு மதியம் 12 மணிக்கு எழுந்து குளித்து விட்டு கறீம் B.C. (Bachelors Cook, Periyamet) சென்று சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு மறுபடியும் குட்டி தூக்கம் முடிந்து நானும் என் நண்பர்கள் காலித், அபூபக்கர் ஆகியோரும் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்க செல்ல பயணித்தோம். V. House (வள்ளுவர் இல்லம்) செல்லும் 32B பேருந்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி V. House வந்தடைந்தோம். அதன் பிறகு காந்தி சிலை இருக்கும் காந்தி கடற்கரைக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்றோம். அப்போது பாதி ரோடு கடந்த நிலையில் அடுத்த பாதியை கடக்க நிற்கும் போது 4 அல்லது 5 இரு சக்கர வாகனங்கள் வேகமாக எங்களை கடக்க முயன்ற போது அதில் ஒரு வாகனம் எங்களின் மூவர் மீதும் மோத நானும் காலித்தும் காந்தி சிலைக்கு எதிரே உள்ள ரோட்டில் நிலைகுலைந்து கீழே விழ (அந்த நேரத்தில் அந்த ரோட்டில் வண்டி எதுவும் வராமலிருந்தது கடவுளின் செயலலே அன்றி வேறில்லை), அபூபக்கர் மட்டும் மோதிய மோட்டர் பைக்கின் முன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். 

நான் சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்து அபூபக்கரை அழைத்தால், என்னுடைய அழைப்புக்கு பதில் கூறாமல் மயக்கத்தில் இருக்க செய்வதறியாமல் அழுது கொண்டே இருக்கிறார் காலித். எப்போதும் போல் மக்கள் கூட்டம் கூடிவிட அதில் ஒருவர் போய் தண்ணீர் வாங்கி வந்து முகத்தில் தெளிங்கப்பா என்று பஞ்சாயத்து தலைவர் ஸ்டைலில் குரல் கொடுக்க நான் அருகில் இருக்கும் கடற்கரை தள்ளு வண்டியில் போய் தண்ணீர் வாங்கி வர அதற்குள் யாரோ ஒருவர் தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்த என் நண்பர் அபூபக்கரை தெளியவைக்க முயற்சி செய்ய ஆனால் அப்போது தான் அபூபக்கர் மூச்சு விடவே ஆரம்பித்தார். ஒரு ஆட்டோ பிடித்து நான் சென்ட்ரல் அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ ஓட்டுனரை ஆணையிட, அவரோ ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் தான் பக்கம் சார். இப்போ போயிடலாம் என்று அங்கு அழைத்து சென்றார். போகும் வழியெல்லாம் என் நண்பர்களுக்கு sms செய்து அவர்களை ராயபேட்டைக்கு வர சொன்னேன். சிறிது நேரத்தில் நான் ராயப்பேட்டையை அடைந்தவுடன் ஓரிரு நண்பர்களும் அதற்குள் வந்து விட்டனர். 

இதற்கிடையில் பொதுமக்கள் உதவியோடு பைக்கில் வந்த அந்த அயோக்கியனை அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க காவல்துறை நண்பர்கள் சென்ட்ரல் மருத்துவமனைக்கு வந்து என்னை விசாரணைக்காக அழைத்து சென்று அதன் பிறகு நான் எழுதிக் கொடுத்த கம்ப்ளைண்டை வைத்து FIR பதிவு செய்து என்னிடம் நகலை கொடுத்தனர். அதற்கு பிறகு தான் ஆரம்பித்தது சோதனைக்காலம். மருத்துவர் அபூபக்கரை பரிசோத்து விட்டு அவருக்கு சீரியஸாக இருப்பதாகவும் அவரை உடனே சென்ட்ரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் எங்களிடம் கூற அங்குள்ள அவசர ஊர்தியை எடுத்துக் கொண்டு சென்ட்ரல் மருத்துவமனைக்கு விரைந்தோம். 

அதற்குள் அபூபக்கரின் வீட்டிற்கு தகவலளித்து, பின்னர் பணத்திற்கு ஏற்பாடு செய்து முடித்தோம். சென்ட்ரல் மருத்ததுவமனையில் அபூபக்கருக்கு தலையில் C.T. ஸ்கேன் எடுத்து தலையில் அடி பலமாக பட்டிருப்பதாக அங்குள்ள Duty Doctor கூறவே காலம் தாழ்த்தாமல் அப்பல்லோ மருத்துவமனையின் Toll free நம்பருக்கு அழைக்கவே அவர்களும் சிறிது நேரத்தில் அவசர ஊர்தியுடன் சென்ட்ரல் மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். அங்கிருந்து தேனாம்பேட்டை சிக்னலில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வெகு சீக்கிரத்தில் வந்த அவசர ஊர்தியில் நானும் என் நண்பரும் அபூபக்கருடன் சென்றோம். பிறகு இரவு முழுக்க கண் விழித்து, அபூபக்கருடைய பெற்றோர் வரும் வரை காத்திருந்து, அவருடைய பெற்றோர் வந்தவுடன் அறை வந்து சேர்ந்து, பிறகு நான் 11 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று சம்பள அட்வான்ஸ் மற்றும் ஒரு நாள் விடுமுறை வாங்கி விட்டு மருத்துவரிடம் காட்டி விட்டு மீண்டும் அறை வந்து சேர்ந்தேன். இந்த சம்பவம் நடந்த பிறகு அபூபக்கருக்காக 21 நாட்களில் ரூ 1.75 லட்சம் சிலவு செய்து அப்பல்லோ மருத்துவமனையில் பெரிய பலன் ஏதும் கிடைக்காமல் தஞ்சாவூரில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் சேர்த்து குணமடைந்து வந்தார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று நிம்மதி மெருமூச்சு விடும் நேரத்தில் தலை மேல் விழுந்த பெரிய இடியாக M.Com, மற்றும் MBA படித்த அபூபக்கருக்கு தான் படித்தது மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கையே மறந்து போனது (Memory Loss) சோகத்திலும் சோகம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அபூபக்கருக்கு நினைவு திரும்பி, பின்னர் திருமணம் ஆகி இப்போது வளைகுடா நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். 

இத்தனையும் எதற்கு சொல்கிறேன் என்றால் எங்கோ ஒருவன் திமிறாக வேகமாக பைக்கை ஓட்ட வேண்டும் என்றும் ஏதோ சாதனை செய்ய வேண்டும் என்றும் நினைத்து ஓட்டியது ஒருவருடைய வாழ்க்கையையே திருப்பி போட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் அபூபக்கருடைய தாயாருக்கும், அவருடைய மாமாவுக்கும் மனதில் மாறாத வடுவாக இருந்தது எனலாம். நானும் என் நண்பர் காலித்தும் இந்த பாதிப்பில் விடுபெற ஆறு மாதகாலம் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் நண்பர்களே தயவு செய்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யாதீர்கள். நீங்கள் விபத்தில் சிக்கினால் நீங்கள் மட்டும் அதற்கு முழு பொறுப்பாவீர்கள், ஆனால் வேறொருவன் மேல் நீங்கள் மோதினால் செய்யாத குற்றத்திற்காக அவனும் அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. 

உண்மை சம்பவமாதலால் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

தோழமையுடன் 

அபு நிஹான்


No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template