Sunday 14 October 2012

முதல் 10 நாட்கள்

அஸ்ஸலாமு அலைக்கும். 
இந்த உலகை படைத்து பரிபாலித்து எல்லா உயிரினங்களுக்கும் உணவளித்து நம்மை மரிக்க செய்து பின் நம்மை உயிர்ப்பிக்க செய்வானே, அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். ரமலான் மாதத்தை தொடர்ந்து ஷவ்வால் துல்காயிதாவில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் அல்லாஹ்வின் பேரருளால் மற்றுமொரு பெருநாளை எதிர்ப்பார்த்த வண்ணமாக இன்னும் சிறிது நாட்களில் துல்ஹஜ் மாதம் நம்மை அடைய இருக்கிறது. இந்த நன்நேரத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லித் தந்த வழியின்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அந்த இறைவன் நம் அனைவருக்கு அருள் என்ற பிரார்த்தனை செய்தவனாக நம் பதிவுக்குள் செல்வோம்.

துல்ஹஜ் மாதம் என்றவுடன் எல்லோருக்கும்  நினைவில் வருவது ஹஜ்ஜு பெருநாள். இந்த ஹஜ் பெருநாளில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த தியாகத்தின் காரணமாக அந்த தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு அல்லாஹ் நம்மை குர்பானி கொடுக்க சொல்லி இருக்கிறான். இந்த நன்நாளில் நாம் மறந்து போனதை நமக்குள் ஞாயபகப்படுத்தி கொள்ளவே இந்த பதிவு.
அதாவது இந்த துல்ஹாஜ் மாதம் முதல் நாளிலிருந்து 10 ஆம் நாள் வரைக்கும் நாம் செய்ய வேண்டிய அமல்கள், அது எவ்வாறு நமக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றி காண்போம்.
10  நாட்கள்
அதிகாலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1,2) பத்து இரவுகள் என்பது துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்.

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி


இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாட்களில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் வெறுமனே தொலைக்காட்சி பெட்டியை பார்த்து கொண்டு, இணையத்தில் பொழுதை கழித்து கொண்டு, இந்த 10 நாட்களை உபயோகப்படுத்தி பல நன்மைகளை கொள்ளை அடிக்கும் ஒரு அருமையான வாய்ப்பை நாம் நழுவ விட்டு கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

அன்றாடம் செய்ய வேண்டிய அமல்களை அந்த குறிப்பிடட நேரத்தில் நிறைவேற்றுவது, அதிகமதிகம் சதக்கா, ஜகாத் போன்ற நற்காரியங்கள் செய்வது, உறவினர்களை அரவணைப்பது, நபீலான வணக்கங்களில் ஈடுபடுவது, தஹஜ்ஜத் நேரத்தில் தொழுது துஆ கேட்பது, ரமலானோடு மூட்டை கட்டி வைக்கப்பட்ட குர்ஆணை எடுத்து ஓதுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, தாவா செய்வது போன்ற நற்காரியங்களில் நம்மை நாம் இனைத்து கொள்வோம்.

அரபா நோன்பு

அடுத்து ஒரு முக்கியமான அமலான அரபா நாளில் நோன்பு நோற்பது இந்த மாதத்தில் மிக முக்கியமான வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்

நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்

குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

தக்பீர் கூறுவது:-
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்

இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி
உள்ஹிய்யாவின் சட்டங்கள்:


அல்லாஹ்வைத் தொழுது வணங்குங்கள்! மேலும் அவனுக்கே அறுத்துப் பலியிடுங்கள்! (106:2) மேலும் பலியிடப்படும் ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களாக நாம் ஆக்கியுள்ளோம் (22:36) ஆகிய வசனங்களின் மூலம் அல்லாஹ் குர்பானியை மார்க்கமாக்கியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கொழுத்த, கொம்புள்ள இரு ஆடுகளை‘பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர்’ எனக் கூறித் தாமே அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி புகாரி – முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ள இந்த நபிவழியை வசதியள்ளவர்கள் நிறைவேற்றுவது அவசியம்.

மேலும் இந்த துல்ஹஜ்ஜில் குர்பானி கொடுக்க சக்தி உள்ளவர்கள் குர்பானி கொடுத்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகள் மட்டுமே உள்ஹிய்யாவிற்குத் தகுதியானவை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பலியிடும் முறையை நாம் ஏற்படுத்தியுள்ளோம் –அவர்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கியுள்ள ஆடு – மாடு – ஒட்டகம் ஆகிய பிராணிகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி(ப் பலியி)ட வேண்டும் என்பதற்காக…(22:34)

மேலும் உள்ஹிய்யா பிராணிகள் குறைகள் இல்லாதவைகளாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனெனில் ‘நான்கு விதமான குறையுள்ள பிராணிகள் உள்ஹிய்யாவுக்குத் தகுதியற்றவை: அதிகக் குருடானது, அதிக வியாதியுள்ளது, அதிகம் நொண்டியானது, அதிகம் மெலிந்தது ஆகியவை’ என நபி (ஸல்) கூறியுள்ளார்கள் (திர்மிதி)

உள்ஹியா (குபாணி கொடுப்பவர்கள் செய்ய கூடாதவை:
‘துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்கள் வந்துவிட்டால் உள்ஹிய்யா கொடுக்க விரும்புபவர் தமது நகங்களையும் முடிகளையும் (களையாமல்) தடுத்துக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) கூறியதாக உம்மு ஸலமா (ரலி) அறிவிக்கும் செய்தி அஹ்மத், முஸ்லிமில் உள்ளது. வேறொரு அறிவிப்பில் உள்ஹிய்யாவை நிறைவேற்றும் வரை தமது முடிகளையோ நகங்களையோ தீண்ட வேண்டாம் என்றுள்ளது.

உள்ஹிய்யா கொடுப்பதாக அந்த பத்து தினங்களுக்கிடையே முடிவெடுத்தாலும் முடிவெடுத்ததிலிருந்து அதை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை.

மேலும் இந்தக் கட்டுப்பாடு உள்ஹிய்யா கொடுக்க நாடியுள்ள குடும்பத் தலைவருக்கு மட்டும் தான். அவருடைய குடும்பத்தினர் அக்குறிப்பிட்ட தினங்களில் தங்களின் மேனியிலுள்ள முடிகளையோ நகங்களையோ களைவது தவறில்லை. உள்ஹிய்யா கொடுக்க நாடியவர் காயங்கள், மற்ற இயற்கைத் தொல்லைகள் காரணமாக முடிகளையோ நகங்களையோ களைந்தால் தவறில்லை. அதற்காக பரிகாரம் தேட வேண்டியதும் இல்லை.

முடிவாக… சொந்தபந்தங்களுக்கு உபகாரம் செய்தல், நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தல் போன்ற நல்ல காரியங்களில் ஆர்வம் காட்ட மறந்து விட கூடாது. பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி முன்னர் நம் சொந்த பந்தங்களிடையே வெறுப்பு, மகிமை போன்றவைகளில் உறவுகள் சிதைந்து இருந்தால் அல்லாஹ்வுக்காக இந்த பெருநாளை காரணமாக காட்டி உறவுகளை பேணி வாழ்வோம்

குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களுக்கு உபகாரம் செய்து இந்த நாட்களில் –பெருநாள் தினங்களில் அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்.


உள்ஹியாவை பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் 

பதிவில் உதவியது : இஸ்லாம் கல்வி.காம்

டிஸ்கி: இன்று (14.10.2012) வளைகுடாவில் பிறை 28 (16 ஆம் தேதி அல்லது 17 ஆம் தேதி துல்ஹாஜ் முதல் பிறையாக இருக்க கூடும்) , தமிழகத்தில் பிறை 27 (17 ஆம் தேதி அல்லது 18 ஆம் தேதி துல்ஹாஜ் முதல் பிறையாக இருக்க கூடும்).  இதை கணக்கில் வைத்து இன்ஷா அல்லாஹ் உள்ஹிய்யா கொடுக்க நாடியவர்கள் முடி, நகங்களை களைவதில் பேணுதலாக இருக்கவும், மற்றும் நம்முடைய அமல்களை இந்த 10 நாட்களில் அதிகமதிகம் செய்யவும் முயற்சி செய்வோம். 

பிறசேர்க்கை: 

வெளிநாட்டில் இருப்பவர்கள்  அவர்களது ஊரில் குர்பாணி கொடுத்தால் நகம் வெட்டுவது, முடி களைதல் போன்ற விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் இருக்கும் 
  
"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) 
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

மேலே சொன்ன விதிமுறைப்படி குர்பானி கொடுக்க நாடியவர்கள் தாங்கள் குர்பானி கொடுத்து முடியும் வரை நகம் மற்றும் முடியை களைய கூடாது என்று புரிந்து கொள்வோம். 

தோழமையுடன்
அபு நிஹான்

1 comment:

  1. சலாம் சகோ.....

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...