Sunday, 7 April 2013

பொறியியல் கல்லூரிகள் - மாணவர்களுக்கு வைக்கப்பட்ட பொறிகளா?

சென்னை: எந்தவிதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத 200 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தவிர அதிக அளவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கல்லூரிக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதுப் பிக்க வேண்டும்.

கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்த கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கான அங்கீகாரத்தை வழங்க பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 520 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார பரிந்துரை குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 200 கல்லூரிகளில் அரசு தெரிவித்த கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும் தெரியவந்தது. இதையடுத்து அக்கல்லூரிகளுக்கு உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் உத்தரவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், தகுதியான பேராசிரியர்களை நியமித்து மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

ஒரு மாதத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான கடிதத்தை எங்களுக்கு அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டு 300 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார். நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகளில் முறையான மைதானம் இல்லாதது, பணியிட காலியிடங்கள் அதிகம் இருப்பது, லேப் வசதி சரியாக இல்லாதது, கேன்டீன் சரியில்லாதது, பஸ் வசதி இல்லாதது, ஹாஸ்டல் சரியில்லாதது, குடிநீர், கழிப்பறை வசதி சரிவர இல்லாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ளன.

நன்றி – தட்ஸ்தமிழ்.காம்

புது பொறியியல் கல்லூரிகளை எடுத்து கொண்டால் முதல் செட் படித்த மாணவர்களே பல கல்லூரிகளில் ஆசிரியர்களாக உள்ளனர். அப்புறம் இவனுங்க கொடுக்கிற 2500 ரூவா சம்பளத்துக்கு அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையுமா ஆசிரியரா வருவாய்ங்க.

கோடி கோடியாக கொள்ளை அடித்து பொறியியல் கல்லூரி நடத்தும் சிலர் தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்று கடுகளவும் நினைப்பதில்லை. நல்ல ஆசிரியரை கொண்டு கல்லூரி நடத்தினால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் யோசனை. சிறிய கூரை கட்டிடத்தில் ஆரம்பித்து சரியான லேப் வசதிகள் இல்லாது முதல் நான்கு வருடத்தை பல்லை கடித்து கொண்டு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து கல்லூரியை நடத்துகின்றனர். பிறகு இடம் வாங்கி, கட்டிடம் கட்ட ஆரம்பித்து பிறகு எல்லா வசதிகளும் வர சுமார் 15 வருடங்கள் ஆகும், இதற்கிடையில் அந்த 15 வருடத்தில் படித்த பல மாணவர்கள் இஞ்சினியராக ஆகி பல ஆணிகளை புடுங்க ஆரம்பித்து விடுகின்றனர்.

இங்கே எதை குறை சொல்ல? என்றே நமக்கு தோன்றவில்லை. காரணம் சரியான மதிப்பெண் இல்லாததால் இதை போன்ற கல்லூரியை நாடும் சிலர் செய்யும் வேலைகள் தான் அந்த கல்லூரியை நடத்த துணை புரிகிறது. கல்லுரிக்கென்று ஒரு சர்வதேச தரம் கொடுத்து, அதை மதிப்பீடு செய்ய வருடம் ஒரு முறை கல்லுரிக்கு வருகை புரிந்து மாணவர்களின் குறைகளை கேட்டு அறியும் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் (இது ஏறகனவே அமலில் இருந்திருக்கலாம், ஆனால் அந்த குழுவை எல்லாம் பணத்தை அடித்து, இல்லயென்றால் மிரட்டி தரத்தை தக்க வைத்து கொள்வார்கள், அப்படி இருந்தால் அதை முதலில் சீர் செய்ய வேண்டும்).

பல இடங்களில் அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் பிணாமிகளே கல்லூரிகளை நடத்துகின்றனர். ஏதாவது பிரச்சனை என்றாலோ, வசதி குறைவுகள் என்றாலோ நிர்வாகத்திடம் முறையிட்டால் அடியாட்களை வைத்து அடிப்பது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இன்னும் கொடுமை என்னவென்றால் முன்னர் சாராய வியாபாரியாக இருந்த சிலர் இன்று கல்வி கண் திறந்த கர்ம வீரர்களாக?, கல்வி தந்தையாக?, இன்னும் எல்லா கருமமுமாக இருப்பது தான்.

எதிர்க்காலம் மாணவர்கள் கையில் என்று சொன்னால் மட்டும் போதாது, அந்த எதிர்க்காலத்தை சிறப்புற செதுக்க அரசாங்கமும் பொது மக்களாகிய நாமும் முயற்சி செய்ய முதலில் சீர் செய்ய வேண்டும்.

நான் ஒரு காமன் மேன் என்னால என்ன செய்ய முடியுமென்று நினைக்கிறவர்களுக்கு,

இதை படிக்கும் பலர் தந்தையாக, தாயாக, அண்ணனாக, அக்காகவாக இருக்கலாம். அப்படி இருந்தால் அல்லது ஏதும் இல்லாத தனி ஆளாக இருந்தாலும் தங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளின் நிலையை கவனித்து உங்கள் சொந்தங்களுக்கு இந்த கல்லூரி ஒ.கெ. இந்த கல்லூரி ஒகெ இல்லை என்று கூறலாம். உங்களில் இருந்தே ஆரம்பியுங்கள், இன்ஷா அல்லாஹ் பெரிய மாற்றம் ஏற்படும். உங்கள் உறவினர்கள் உங்களிடம் இது சம்பந்தமாக ஆலோசனை கேட்டால் கல்லூரிகளின் தரத்தை பற்றி தயங்காமல் சொல்லுங்கள்.

எந்த கல்லுரியில் படிக்கலாம், எந்த கல்லூரியில் படித்தால் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாய்ப்பு கிடைக்கும், எந்த கல்லூரியில் ஓரளவு எல்லா வசதியும் இருக்கிறது என்று நாம் தேடி தெரிந்து கொள்ள வேண்டும். +2 மாணவர்களையும் நன்றாக படிக்க தூண்ட வேண்டும். நல்ல பொறியியல் கல்லூரிகளில் சீட் கிடைக்க வில்லையென்றால் வேறு படிப்புகள் படிக்கலாம். பொறியியல் படிப்பு படித்தால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலை இல்லை.

இதை போன்ற கல்லூரிகளை மக்கள் புறக்கணித்தாலே கல்லூரி நிர்வாகம் திருந்த வாய்ப்பு உள்ளது.

தோழமையுடன்
அபு நிஹான்

9 comments:

 1. //சிறிய கூரை கட்டிடத்தில் ஆரம்பித்து சரியான லேப் வசதிகள் இல்லாது முதல் நான்கு வருடத்தை பல்லை கடித்து கொண்டு அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து கல்லூரியை நடத்துகின்றனர். பிறகு இடம் வாங்கி, கட்டிடம் கட்ட ஆரம்பித்து பிறகு எல்லா வசதிகளும் வர சுமார் 15 வருடங்கள் ஆகும், இதற்கிடையில் அந்த 15 வருடத்தில் படித்த சுமார் நான்கு செட் மாணவர்கள் இஞ்சினியராக ஆகி பல ஆணிகளை புடுங்க ஆரம்பித்து விடுகின்றனர். // இது என்ன கணக்கு ? அந்த கல்லூரிளில் எல்லாம் 4 வருடத்திற்கு ஒருமுறை தான் அட்மிஷன் நடக்குமா?

  ReplyDelete
 2. //இது என்ன கணக்கு ? அந்த கல்லூரிளில் எல்லாம் 4 வருடத்திற்கு ஒருமுறை தான் அட்மிஷன் நடக்குமா? // மாற்றி விட்டேன் சகோ. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

  ReplyDelete
 3. எல்லாவற்றிற்கும் காரணம் பணம்தான்.

  ReplyDelete
 4. //இதில் 200 கல்லூரிகளில் அரசு தெரிவித்த கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

  .....அக்கல்லூரிகளுக்கு உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் உத்தரவிட்டார். ....

  கடந்த ஆண்டு 300 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார்.//

  //ஒரு மாதத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம், நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான கடிதத்தை எங்களுக்கு அனுப்ப வேண்டும்.//

  ஒரு மாசத்துக்குள்ள அடிப்படை வசதிகளையோ, ஆசிரியர் எண்ணிக்கைகளையோ சரிசெய்துவிட முடியும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? நோட்டீசு அனுப்புறது, கல்லூரியைச் சரிசெய்யவா அல்லது “அவங்களைச்” சரிக்கட்டவா?

  போன வருஷம் நோட்டீஸ் அனுப்புன 300 கல்லூரிகளும் இதைச் சரிசெய்துவிட்டன என்பதை மக்களாகிய நாம் எப்படி உறுதி செய்வதாம்? மொதல்ல எந்தெந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்புனாகன்னே தெரியாதே?

  இந்த வருசம் நோட்டீசு அனுப்புன 200 காலேஜும், போன வருசம் அனுப்புன 300ல உள்ள காலேஜுகளா, இல்ல வேற காலேஜுகளா?...

  ஹும்.. உங்ககிட்ட கேட்டு என்ன செய்ய? நீங்களும் என்னப்போல மனம்பொறுக்காமத்தானே பதிவு எழுதிருக்கீங்க!!

  என்ன தீர்வு தெரியுதுன்னா, புது காலேஜுகளைத் தவிர்த்து, 15 வருஷமாவது ஆன கல்லூரிகளில்தான் பிள்ளைகளைச் சேர்க்கணும்னு. ஆனா, அதுக்கு டொனேஷன் கொடுக்க தம்ழ்நாட்டு ஏடிஎம்கள் எல்லாத்தையும் கொள்ளையடிச்சாலும் பத்தாதே!! :-))))))

  ReplyDelete
 5. ஸலாம் சகோ.அபுநிஹான்,
  சரியான நேரத்தில் நல்ல விழிப்புணர்வூட்டல்.

  1993 நான் +2 படித்து வெளிவரும்போது... அரசு தனியார் என எல்லாம் மொத்தமாக சேர்த்து தமிழகத்தில் 40 பொறியியல் கல்லூரிகளே இருந்தன. ஆனால்... இருபதே வருடங்களில்... தனியார் பொறியியல் கல்லூரிகளே தமிழகத்தில் 520 எனில்...?

  இருபது வருடங்களில் தமிழக மக்கள்தொகை 13 மடங்குக்கும் மேலா..? இது ஒன்றே சொல்கிறதே பொறியியலுக்கு பின்னே ஊழல் பின்னணியை..!

  ReplyDelete
 6. இந்த வருசம் நோட்டீசு அனுப்புன 200 காலேஜும், போன வருசம் அனுப்புன 300ல உள்ள காலேஜுகளா, இல்ல வேற காலேஜுகளா?... ஹுஸைனம்மா
  ஆய்வுக்கு உரியது நல்ல விழிப்புணர்வு பதிவு இது போன்ற பதிவுகள் அனைவரும் காணும் வகையில் பகிரப்பட வேண்டும் நம்மால் பகிரப்பட வேண்டும்

  நல்ல பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிர்ந்தால் நாடு நாளை உங்களை வணங்கும்

  --
  www.vitrustu.blogspot.com
  VOICE OF INDIAN
  256 TVK Qts TVK Nagar,
  Sembiyam,
  Perambur,
  Chennai 600019

  ReplyDelete
 7. ஆய்வுக்கு உரியது நல்ல விழிப்புணர்வு பதிவு இது போன்ற பதிவுகள் அனைவரும் காணும் வகையில் பகிரப்பட வேண்டும் நம்மால் பகிரப்பட வேண்டும்

  நல்ல பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிர்ந்தால் நாடு நாளை உங்களை வணங்கும்

  --
  www.vitrustu.blogspot.com
  VOICE OF INDIAN
  256 TVK Qts TVK Nagar,
  Sembiyam,
  Perambur,
  Chennai 600019

  ReplyDelete
 8. இதெல்லாம் சிந்திப்பதே இல்லை - கொழுத்த பணம் உள்ளவர்கள்...

  நோட்டீஸ் தானே அனுப்பி உள்ளது... பெட்டிகள் கை மாறினால் சரியாகி விடும்...

  இன்னைக்கு நல்ல தொழில் இது தான்... சேவை என்பது மாறி பல காலம் ஆகி விட்டது...

  ReplyDelete
 9. அனைவருடைய கருத்துகளுக்கும் நன்றி

  ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...