Monday, 17 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 2அனுபவம் இல்லாத தொழிலை செய்ய கூடாது:

அனுபவம் இல்லாத வேலையை ஆரம்பிக்க கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் ஹோட்டல் வைத்தால் உங்களுக்கு புரோட்டாவும் போடத் தெரிய வேண்டும், டீயும் போடத் தெரிய வேண்டும். டீ / புரொட்டா மாஸ்டர் வரவில்லையென்றால் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கேவலமாக எண்ணவும் கூடாது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் டீ / புரோட்டா மாஸ்டர்களிடம் கடினமாக நடந்து கொண்டால் / அல்லது அவர்கள் திடீரென்று நோய்வாய்பட்டால் நாம் வேலை செய்ய கற்றிருந்தால் தான் அன்று கடை திறந்திருக்கும். இல்லையேல் கடையை அடைத்து விட்டு வீட்டில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தொழில் செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு அதில் அனுபவம் இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களில் அந்த தொழில் செய்யும் கூடத்தில் ஒரு 6 மாதம் வேலை செய்து தொழிலை கற்று கொண்டு, நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு தொழிலை ஆரம்பிப்பது நல்லது. இன்று பலர் தொழிலாளிகளை நம்பி தொழிலை ஆரம்பிக்கின்றனர், ஆனால் அந்த நம்பிக்கைக்குரிய தொழிலாளி தன்னுடைய கடையை விட்டு போனவுடன் செய்வதறியாது திகைக்கின்றனர்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது:

வியாபாரம் ஆரம்பித்த உடன் ஒரே பாட்டிலேயே பணக்காரனாகி, வீடு கட்டி, கார் வாங்க இது ஒன்றும் சினிமா இல்லை. வியாபாரம் சீராகும் வரை காத்திருக்க வேண்டும். மற்றொன்று மழை, வெயில், குளிர் காலங்கள் இந்தியாவில் இருக்க தான் செய்யும். வளைகுடா நாடு போல் எந்நேரமும் நாம் ஏஸியில் வேலை செய்ய முடியாது இது தான் நம் நாடு, இங்கு தான் நாம் பிறந்தோம், இங்கு தான் நாம் வளர்ந்தோம், இங்கு தான் நாம் வாழ போகிறோம் என்று நம்மை நாமே முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். பலருக்கு வியாபாரம் நன்றாக போனாலும் இதை போன்ற அட்ஜஸ்மெண்டுகள் இல்லாததால் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்கின்றனர் என்பதால் இதையும் சொல்லி கொள்கிறேன். 

அடுத்தது வீட்டில் உள்ளவர்களை நீங்கள் ஒத்து கொள்ள வைக்கவேண்டும். சாதரணமாக முதலில் ஏன் உங்களுக்கு வேண்டாத வேலை என்று ஆரம்பிப்பார்கள். நடுத்தெரு நாசர பாரு, வெளிநாட்ல இருந்து உங்கள மாதிரி தான் உள்நாட்டுல வேலை செய்றேன்னு வந்தான், இப்ப ஓட்டாண்டியா நிக்கிறான் என்பது போன்ற வார்த்தைகளுக்கு நீங்கள் பதில் வைத்திருக்க வேண்டும் / அல்லது அவர்களுக்கு ஊரில் / அல்லது இந்தியா நாட்டில் தொழில் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வீட்டு எஜமானிகள் என்று சொல்ல கூடிய மனைவி அல்லது தாய் வரும் வருமானத்திற்கேற்ப சிலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் கணவன் / பிள்ளை இருக்கும் போது சிலவு செய்ததை போன்றே அவர் உள்நாட்டில் இருக்கும் போது சிலவு செய்வேன் என்று அடம் பிடிக்க கூடாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் இதனாலேயே நன்றாக தொழில் நடந்து கொண்டிருந்தாலும் வரவை விட சிலவு அதிகாமாவதை கவனித்த பல சகோதரர்கள் மீண்டும் வெளிநாடு செல்வதை நான் பார்த்து இருக்கிறேன். அதே நேரத்தில் வியாபாரத்தில் கஷ்டம் வரும் போதும், நஷ்டம் ஏற்படும் போதும் “உங்களுக்கு இதுலாம் தேவையா? அடுத்த வீட்டுக்காரன பாருங்க, வெளிநாடு போய் நாளு காசு சம்பாரிச்சு வீடு வாசல், காரு, பங்களா, காம்ப்ளக்ஸ்னு கட்டி பெரிய ஆளாகிட்டான். நீங்க இத்தனை வருஷமா கஷ்டப்பட்டத வியாபாரத்துல போட்டு இப்ப நஷ்டமாக போகுது” என்று பொங்காமல் இறைவன் இதை விட வேறு ஒரு நல்ல விஷயத்தை நமக்காக நாடி இருக்கிறான் என்று நினைக்கிறேன். இதற்காக மனம் களங்க வேண்டாம். இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி கணவரை / பிள்ளையை தேற்ற வேண்டும்.

கேவலமாக நினைக்க கூடாது:

எந்த வேலையயும் கேவலமாக நினைக்க கூடாது. வெளிநாட்டில் நம்மவர்கள் பலர் படிப்பறிவில்லாமல் சொல்லி கொள்ளும்படியான வேலைகளில் இல்லாமல் ஏதோ அவர்களால் முடிந்த அளவு வேலை செய்து குடும்பத்தை காத்து வருகின்றனர். அதே உழைப்பை அதே கஷ்டத்தை, அதே வெறியை, அதே ஊக்கத்துடன் சொந்த நாட்டில் செய்தால் நம் உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டு தெரிந்த தொழிலை அது எந்த தொழிலாக இருந்தாலும் களத்தில் இறங்க வேண்டும். 

விரும்பிய தொழிலை செய்ய வேண்டும்:

ஒருவர் டிப் டாப்பான ஆசாமியாக இருப்பார். அவரிடத்தில் ஹோட்டல் பிஸினஸ் வைத்தால் நல்லது என்று யாரேனும் யோசனை சொல்லி இவரும் ஒரு வேகத்தில் ஆரம்பித்து விடுவார். பிறகு ஹோட்டல் சூடு மற்றும் புகை என்று அவர் இஷ்டமில்லாத தொழிலை செய்ததால், அவருக்கு அதுவே ஒரு கடுப்பாகி ஹோட்டலை மூடி விட்டு வேறு தொழில் செய்ய கிளம்பி விடுவார். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும், உதாரணத்திற்கு ஹோட்டல் தொழிலை சொன்னேன்.

முழுமையாக ஈடுபட வேண்டும்:

எந்த தொழிலை செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும். காலையில் கடை பையனிடம் சாவியை கொடுத்து திறக்க சொல்லிவிட்டு 11:00 மணியளவில் கடைக்கு சென்று உட்கார்ந்து விட்டு - டீ, வடை சாப்பிட்டு விட்டு மீண்டும் சாப்பிட 1:00 மணிக்கு வந்து விட்டு பகலில் கடை திறந்திருந்தாலும் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு மீண்டும் 04:00 மணிக்கு வந்து கடையில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினால் கடையில் கல்லா மிஞ்சுவதே பெரிய விஷயமாயிடும். இப்போது யாரையுமே நம்ப முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதில் தவறு செய்வதற்கு நாமே சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தால் நாம் தான் அதை அனுபவிக்க வேண்டும்.நண்பர் ஒருவரிடம் பேசி கொண்டிருக்கையில் Composite Plumbing Pipe. வியாபாரம் நன்றாக போய் கொண்டிருக்கிறது என கூறினார்.  மற்ற பைப்புகளைப் போன்று 10 வருட உத்திரவாதமில்லாமல் 50 வருட உத்திரவாதம் கொண்டது. துருப்பிடிக்காது, எளிதில் வளைத்துக்கொள்ளலாம் அதனால் பிட்டிங்ஸ் குறைவாகவே பயன்படும் இதுப்போன்று எண்ணற்ற சிறப்புகள் கொண்ட Composite plumbing pipe. இது போல் வித்தியாசமான வியாபாரம் செய்து பயனடையுங்கள். 

எங்கள் ஊரில் இப்போது கழுத்து மணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. பெண்களே அவர்களின் ஐடியாவுக்கேற்பவும், இணையத்தில் பார்த்தும் மணிகளை கோர்த்து 150 முதல் 500 வரை ஒரு மணியை விற்கிறார்கள். அது போல் வீட்டிலேயே சேலை வாங்கி விற்று வருகிறார்கள். இதுவெல்லாம் வீட்டு வேலை பாதிக்காத வகையில் செய்யும் வியாபாரம். 

பின்வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.

தோழமையுடன்
அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...