Sunday, 7 February 2016

சினிமா என்னும் கூறிய வாள்

தமிழக திரைப்படங்களில் முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டும் விஷயத்திற்காக நாம் கொந்தளித்தால் (சமீபத்தில் வந்த விஸ்வரூபம்), நம் மாற்று மத சகோக்களான இந்து நண்பர்கள் இதற்கு ஏன் வருத்தப்படுகிறீர்கள், எங்கள் மதத்தையும் தான் கேலிக்குரியதாக்குகிறார்கள், எங்கள் மதத்தையும் தான் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் புரிதலுக்காகவே இதை பகிர்கிறேன். 


பல தமிழ் படங்களில் ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக, தேச துரோகிகளாக காட்டுகிறார்கள், ஒத்து கொள்கிறேன், ஆனால் அதே திரைப்படத்தில் அந்த தீவரவாதியை அழிக்கும் நல்லவனாக, ஹீரோவாக, தேசபக்தனாக, இந்திய நாட்டின் மீது அக்கறை கொள்ளும் ஒரு சிறந்த குடிமகனாக ஒரு இந்துவையும் காண்பிப்பர், ஆம் அவர் போலிஸாக, இராணுவ அதிகாரியாக, நீதிபதியாக, சமூக அக்கறை கொண்டவராக இருப்பார். பார்ப்பவர்களுக்கு இந்து சமுதாயத்தில் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை வரும். ஆனால் முஸ்லிம்களில் அப்படி காட்டுவது இல்லை. ஒன்லி தீவிரவாதி தான். அடுத்து தவறு செய்தவன் இந்துவாக இருந்தாலும் அவனுடைய தேசபக்தியின் காரணமாக தன் சகோதர ஹிந்துவை அழிக்கிறான் என்பது போன்ற எண்ணம் நம் மக்களின் மனதில் தோன்றும். அந்த மூன்று மணி நேரங்கள் தான் ஒரு சமுதாயத்தின் மீது பாசத்தை / காழ்ப்புணர்ச்சியினை உண்டு பண்ண கூடியது. முஸ்லீம்கள் என்றால் என்றுமே தவறு செய்ய கூடியவர்களாகவும், தேச விரோத செயலை செய்பவர்களாகவும், நல்லவன் என்று ஒருவனுமே இல்லாதது போலவும், அவர்களை கண்டிக்க கூடிய நல்லவன் வேறு மதத்தில் இருப்பதாகவும் (பெரும்பாலும் இந்து மத சகோதரர்கள்) காட்டுவது என்பது வேண்டுமென, தெரிந்தே, திட்டமிட்டே ஒரு சமுதாயத்தை / இனத்தை தனிமைப்படுத்துவது போன்றதாகும்.

இதை தான் சுமார் 30 வருடங்களாக திரைப்படங்கள் செய்து வருகிறது. நம்பிள்கி நிம்பிள்கி என்று வட்டி வியாபாரம் செய்பவர்களாக முஸ்லீம்களை முதலில் காட்டினார்கள் (அதாவது அவனுக்கு வட்டி வியாபாரம் தான் தெரியும், மற்றும் அவனுக்கு அவ்வளவாக தமிழ் வராது போன்ற மாயையை உண்டு பண்ணுவது), பிறகு தீவிரவாதி என்றாலே அது பாகிஸ்தான் முஸ்லீம் தான் என்றும் அதை போல் அந்த தீவிரவாதிக்கு துணை போறவர்கள் தான் இந்திய முஸ்லீம்கள் எனவும் காட்டப்பட்டது. இதன் விளைவு பெரிய நகரங்களில் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு கூட வீடு கொடுக்க பயப்படும் சூழ்நிலைக்கு மக்கள் மாறினார்கள். முஸ்லீம்கள் என்றாலே மனிதாபிமானம் இல்லாத கொடூர மனம் படைத்தவர்கள் என்ற நினைப்பை முதலில் மக்கள் மனதில் பதியவைத்து.

அதனால் ஏற்படும் தாக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தயாரானது ஒரு படை. அது தான் RSS என்னும் காவிபடை. ஆனால் இறைவனின் நாட்டத்தால் முதலில் முஸ்லீம்கள் குண்டு வைத்தார்கள் என்று புரளியை கிளப்பிய அஜ்மீர் குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு. குண்டுகளை வைத்தவர்கள் இந்து தீவிரவாதிகள் தான் என்று காவல் துறையின் நேர்மையான பெயருக்கு சொந்தமான கர்கரே கண்டுபிடித்தார். அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அவருக்கும் பாடை கட்டி அனுப்பி விட்டனர். அவரையும் முஸ்லீம்கள் தான் கொலை செய்தனர் என்றே கூக்குரலிட்டனர். இதை விட கொடுமை என்னன்னா தென்காசியில் உள்ள RSS அலுவலகத்தில் கூட அவர்களே குண்டு வைத்து விட்டு முஸ்லிம்கள் வைத்தார்கள் என்று கூக்குரலிட்டனர். பிறகு உண்மை கண்டறியப்பட்டது.

சரி விஷயத்துக்கு வருவோம். இது போன்ற தாக்கங்கள் எல்லாம் மக்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லும் சகோக்களும், நாங்கள் பல காலமாக அண்ணன் தம்பியாகதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் சகோக்களும் ஒன்றை யோசித்து பார்க்க வேண்டும். இவர்களின் குறி இன்றைய தலைமுறை அல்ல. நாளைய தலைமுறை. முகநூலில் பகிரப்பட்ட ஒரு செய்தியை உங்களுக்காக இங்கு பதிகிறேன். இது போன்ற செய்திகள் பிஞ்சி மனதில் பதியப்பட்டால் அந்த குழந்தைகள் என்ன நினைக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள். துப்பாக்கி படம் பார்த்து விட்டு ஒரு மாற்று மத நண்பரின் குழந்தை ஏன் அப்பா முஸ்லீம்களில் யாருமே நல்லவர்களாக இருக்க மாட்டார்களா என்று கேட்டதாம். இந்த கேள்வி பல குழந்தைகளுக்கும் வந்திருக்கும். அப்படி வளரும் குழந்தைகள் முஸ்லீம்கள் மீது எப்படிப்பட்ட சிந்தனைகளை வைத்திருக்கும் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் கொடுமை என்னன்னா ஃபேசன் டிரஸ் போட்டியில் தீவிரவாதியாக காண்பிக்கும் ஒரு நபருக்கு தொப்பியும், தாடியும் வைத்து ஒரு மாணவனை பள்ளிக்கூடத்தில் தயார் செய்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஒரு பக்கம் சினிமா இந்த நிலையில் சென்று கொண்டிருக்க மறுபுறம் சாதிய அடையாளங்கள் என்று சொல்லி கொலை செய்வதையும், கற்பழிப்பதையும் பெருமையாக காட்டி கொண்டு சாதிகள் நேற்றும் இருந்தது இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும் என்று வரலற்றில் பதியக்கூடிய செய்திகளாக காட்டுகின்றனர். வம்சம் என்னும் படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களை திருவிழா நேரத்தில் கருவருக்ககூடியவர்களாகவும், அதை எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இருந்தாலும் திருவிழா சமயத்தில் அந்த கொலையை செய்து கருவருக்கும் படலம் என்று பதிய வைக்கின்றனர். தேவர் மகனில் ஆரம்பித்து, சின்ன கவுண்டர், மறுமலர்ச்சி, சுந்தரபாண்டியன், வம்சம், குட்டிப்புலி போன்ற படங்கள் வரை அப்பட்டமாக சாதிய கலாச்சாரங்கள் என்று சொல்லி வன்முறையை வளரும் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். இன்றும் பல குடும்பங்களில் குழந்தைகள் கோவப்பட்டால் அது நம்ம சாதியிலையே ஊருணதுல, அதான் கோவப்படுதான் அப்படின்னு சொல்லிட்டு போயிக்கிட்டே இருப்பாய்ங்க. பல பள்ளிகளில் தத்தமது சாதியினரிடத்து தான் பிள்ளைகள் பழகுகிறார்கள். பெற்றோர்களும் சொல்லியே அனுப்புகிறார்கள், எலே நம்ம ஆள்ங்க கிட்ட தான் சினேகம் வச்சுக்கனும், புரிஞ்சுதாலே, அப்படின்னு சொல்லி சாதிய அடையாளத்தை சின்ன வயசுலேயே விதைக்கிறார்கள். இது போதாது என்று ஹரி அவர் பங்குக்கு ஏற்றவாறு எங்கே கிராமத்தில் உள்ளவர்கள் சாதியையும், வன்முறையையும் மறந்து விடுவார்களோ என்ற பயத்தில் சாதியை வைத்து படம் எடுக்காவிட்டாலும் சாதி கண்டிப்பாக தமிழகத்தில் இருக்கிறது, சாதீய வித்தியாசங்கள் இருக்கிறது, சாதி சங்கங்கள் இருக்கிறது, கிராமத்து மக்கள் இன்னும் வன்முறையை மறக்கவில்லை என்பது போன்ற விஷயங்களை பதிவு செய்து கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக சாதிய கொலைகள் ஒன்றும் பெரிய தவறில்லை போல என்ற எண்ணத்தையே இந்த திரைப்படங்கள் நமக்கு சொல்லி தருகின்றன. நீங்கள் கேட்கலாம், சினிமாவை பார்த்து விட்டா மக்கள் கெட்டு போகிறார்கள் என்று, ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் சினிமா தான் ஆட்சியை நிர்ணயிக்க கூடிய சக்தியாக இருந்து கொண்டிருக்கிறது. சினிமா பட்டறையில் இருந்து நல்ல நடிகர்களை தமிழன் தேர்ந்தெடுக்கிறானோ இல்லையோ ஆட்சியாளர்களை அங்கே இருந்து தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறான்.  

தோழமையுடன்
அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...