Wednesday, 26 January 2011

சுதந்திர போராட்ட வீரத்தாய் - கரூர் நா. பியாரி பீபீஇந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது.

நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர். காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக் கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது.

எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை நாம் அறிவோம். இந்த நாடு அறியும்.
நம்மில் எத்தனை பேருக்கு நா. பியாரி பீபீயை தெரியும். இதே கரூரைச் சேர்ந்த தமிழச்சி தான் இவர்.

இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும் குறைந்தது அல்ல. இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது. வீரத்தாய் பியாரி பீபீ ஒரு 100% இஸ்லாமியப் பெண் என்பதை முதலில் மனதில் பதிய வைத்துக் கொண்டு இவரின் வரலாற்றை படித்துப் பார்த்தால் இவரின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியும்.


வீரத்தாய் ந. பியாரி பீபீ


இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார்.

இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது.

அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர்.

மேலும், இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம் பெண் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாத சில முஸ்லிம்கள், பியாரி பீபீ போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் போது, அவர் மீது கற்கலை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர். கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில் பங்கு பெற அனுமதித்தார்.

கி.பி. 1920 முதல் கி.பி. 1947 வரை அனைத்து போராட்டத்தில் கலந்து கொண்டார் சாகிபு.

கி.பி. 1930 –ல் இந்திய விடுதலை இயக்கத்தைப் பற்றியும், ஆங்கிலேயரின் கொடுமையான ஆட்சியைப் பற்றியும் மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் செய்ததால் ஆங்கில அரசு இ.பி.கோ. 145 பிரிவின் கீழ் சாகிபுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்தது.

கி.பி. 1942 –ம் ஆண்டு கரூரில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

கி.பி. 1943 –ல் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் 1 வருடம் 2 மாதம், 25 நாட்கள் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்கள் பியாரி பீபீயை டெல்லிக்கு வரவழைத்து வெள்ளித் தட்டு பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.

இன்று கூட இஸ்லாமியப் பெண்கள் கடைத் தெருவில் நடந்து போவதற்கே கூச்சப்படக் கூடியவர்கள்.

70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இஸ்லாமியப் பெண் தெருவில் இறங்கி எதேச்சதிகார அரசிற்கு எதிராக போராடியிருக்கிறார் என்றால் இந்த வீரத்தாயின் தேசபக்தியை என்னவென்று சொல்வது!.

அன்றைய காலகட்டதில் மிகத் தீவிரமாக போராடியவர்களுக்கே 5 மாத சிறை தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட மிக குறைவாகவே பெண்களுக்கு வழங்கப்படும்.

ஆனால், அன்றைய தீவிரப் போராளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இவருக்கு வழங்கப்பட்டது.

அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு 5 மாத சிறை தண்டனை என்றால் பியாரி பீபீயை எவ்வளவு ஆபத்தானவராக வெள்ளயர் அரசு உணர்ந்திருக்கிறது என்பதை நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.

இவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா? என்ற தகவல் கூட இந்தநாட்டிற்கு தெரியவில்லை.

இந்த வீரத்தாயின் தியாகத்தை நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமை. எத்தனையோ முஸ்லிம் இயக்கங்கள் தமிழகத்தில் உண்டு.

அவர்களுக்கு நம் வேண்டுகோள் என்னவென்றால், வீரத்தாய் பியாரி பீபீயை நாட்டிற்கு அறிமுகம் செய்யுங்கள், இவரின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெற செய்யுங்கள், மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

இதைப்படிக்கும் யாராவது ஒருவர் அதற்கான முயற்சி எடுப்பார் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறோம்.

சுதந்திரப் போரை காட்டிக் கொடுத்தவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும் சுதந்திரத்திற்கு சொந்தம் கொண்டாடும்போது, உண்மையில் போரடிய நம் சமுகம் இன்று உறங்கி கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

இதைப்படிப்பவர்கள் முடிந்த அளவு நகல் எடுது விநோகியுங்கள், இ-மெயில் மூலம் நன்பர்களுக்கு அணுப்புங்கள்.

குறைந்த பட்சம் இந்த பிரதியை உங்கள் நன்பரின் கையில் கொடுங்கள்.

இறைவன் உங்களுக்கு ஈருலக வெற்றியை தந்திடுவானாக..!

- Sameera Faisal

 நன்றி : Kuwait Tamil Islamic Committee மின்னஞ்சல்

படம் : கூகிள்


4 comments:

 1. ம்......... பொருத்தமான நாளில் பொருத்தமான நினைவூட்டல்! அடுத்தவர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை யாரும் மறக்ககூடாது!

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ மாத்தி யோசி.

  ReplyDelete
 3. மிகவும் புதிய செய்தி!! மிக்க நன்றி அறியத் தந்தமைக்கு.

  ReplyDelete
 4. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி

  ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...