Thursday, 3 February 2011

கோவலனா கேவலனா?கி.வீரமணி அவர்கள் பெரியாரோடு நெருங்கி பழகியவர். நன்றாக அரசியல் நாகரிகம் தெரிந்தவர். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் தி.கவில் இணைந்து பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்து வருபவர். ஆசியாவிலேயே பெண்களுக்காக தனி பொறியியல் கல்லூரி ஆரம்பித்தவர், பின்னர் அதில் தொழில் நுட்ப பாடத்திட்டத்தையும் சேர்த்து பெண் பிள்ளைகள் தனியாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக படிப்பதற்கு வழிவகை செய்தவர். 

அந்த மகாகணம் பொருந்திய பெரியாரின் போர்வாள் அரசியல் கூட்டணியின் தர்மம் காக்க மக்களை முட்டாளாக்கும் நோக்கத்துடன் அறிக்கை விடுவது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெரியாரின் பாசறையில் வளர்ந்த வீரமணி பெரியார் அரசியலில் கடைப்பிடைத்த குறைந்தபட்ச நாகரிகத்தை கூட கடைபிடிக்கவில்லை. வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் கொல்லப்பட்ட பிறகு தான் கோவலன் தவறு செய்யவில்லை என்று தெரியவந்தது. ஆனால் ராசா கைது செய்யப்பட்டு இருக்கும் போதே, விசாரணை முழுவதுமாக முடியாத போதே ராசா கோவலன் போல் நிரபராதி என்று யாரோ பகுததறிவாளரான வீரமணிக்கு வெற்றிலையில் மை போட்டு சொல்லிவிட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. 
தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் ஓட்டுகள் வாங்க எதையாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் கலைஞர் அரசின் சாதனைகள்(?) சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால் ராசாவின் வழக்கை வைத்து ஓட்டு கேட்பது என்பது “தவளை தன் வாயால் கெடும்” என்பது போல் ஆகிவிடும். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று இன்றைய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராலும், பல தரப்பாலும் சொல்லப்பட்ட இழப்பு என்பது கற்பனையாக சொல்லப்பட்டது என்ற அறிவுப்பூர்வமான / புத்திசாலித்தனமான கருத்தை வீரமணி சொன்னதன் மூலம் தேர்தலுக்காக எதையும் மூடி மறைக்கும் திமுக/அதிமுக போலத்தான் திராவிடர் கழகமும் இருக்கும் என்பதை நிரூபித்து விட்டார். 

ஓ பெரியாரின் பாசறையில் வளர்ந்த பகுத்தறிவாளர்களே! 

கடவுளை ஏற்றவர்களை முட்டாள் என்று சொல்வதும், மூட நம்பிக்கைகளை நம்பியவனை சாடுவதும் மட்டுமல்ல பகுத்தறிவாளனுக்குரிய பண்புகள். மாறாக இதைப் போன்ற தலைவர்களை பின்தொடராமல் இருப்பதும், இந்த அறிக்கைகளை விடும தலைவர்களை தலைமை பொறுப்பிலிருந்து தூக்கி எறிவதும் பகுத்தறிவாளனுக்குரிய பண்புகள் என்பதை மனதில் கொள்க. எதை சொன்னாலும் ஏற்கும் கூட்டம் பகுத்தறிவாளர்கள் கூட்டம் இல்லை என்பதை உங்கள் தலைமைக்கு எடுத்து கூறுக. இதில் இன்னுமொரு சிறப்பு விஷயம் என்னெவென்றால் ராசா ஊழல் செய்து விட்டார்/ அல்லது அவருடைய செயலால் அரசுக்கு நஷ்டம் என்று சொன்னால், அதிமுகவில் ஊழல் செய்தார்களே, பி.ஜெ.பியில் ஊழல் செய்தார்களே என்று சிறுபிள்ளை போல் சொல்லிக் கொள்கின்றனர் திராவிடர் கழகத்தின் கொள்கைவாதிகள். 

பார்க்க தமிழ் ஓவியா

ஒருவன் கொலை செய்தால் அவன் செய்த கொலைக்காக தண்டனை வாங்கி தருவோமா அல்லது நாட்டில் எவ்வளவோ கொலைகள் செய்திருக்கிறார்கள், அவர்களுடைய வழக்கு நிலுவையில் இருக்கிறது, அதனால் இது ஒன்றும் பெரிய தவறில்லை என்று கூறுவோமா? இப்படித்தான் இருக்கிறது பெரியார் கொள்கையை பின்பற்றும் பகுத்தறிவாளர்களின் நியாமும். 

பார்க்கலாம் திராவிட கழகத்தில் வெல்லப்போவது பகுத்தறிவாதியா? அல்லது அரசியல்வாதியா என்று

ஆக்கத்தில் உதவியது: தட்ஸ்தமிழ்
படம்: கூகிள்

அபு நிஹான்No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template