Monday 13 June 2011

KPN விபத்து - தொடரும் தீர்வில்லா பயணம்

KPN Bus - After accident
கடந்த ஜூன் 8ஆம் தேதி KPN ஆம்ணி பஸ்ஸில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த KPN ஆம்ணி பேருந்து, இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக ஓட்டுனர் கூறியிருக்கிறார். காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.

1.30 மணியளவில் பேருந்து அவலூரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் ஒரு லாரி போய்க் கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் ஆம்னி பேருந்தின் டிரைவர் நாகராஜ் தடுமாறினார். உடனடியாக பேருந்தை இடதுபுறமாக அவர் திருப்பியுள்ளார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கால்வாய் பாலத்தின் சுவரில் மோதி இடித்துத் தள்ளி கீழே விழுந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. 

மேலே சொன்னது நீங்கள் அனைவரும் படித்து இருப்பீர்கள். நடந்த விபத்திற்காக சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாயும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 ரூபாயும் அரசு வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு சென்ற அதிமுக அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு விபத்தில் இறந்தவர்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டதை இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். 

இப்ப என்ன மேட்டர்னா, இத மாதிரி சாலைகளில் நிறைய விபத்துகளை பார்க்கிறோம், ஒரு மாதத்திற்கு அதை பற்றி பேசிக் கொண்டிருப்போம், அப்புறம் மறந்திடுவோம். அது தான் இயல்பு. ஆனால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், இதுபோன்ற விபத்திற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து மீண்டும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த கோர விபத்து நடந்த KPN ஸ்லீப்பர் கோச்சின் தன்மை பற்றி ஆராய வேண்டும் என்று கூறுகிறார் வடக்கு மண்டல ஐஜி சைலேந்திர பாபு. அதாவது பேருந்து கவிழ்ந்தவுடன் மக்கள் பேருந்தில் இருந்து தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டதால் ஸ்லீப்பர் கோச்சின் தன்மை பற்றி விசாரிக்கபட வேண்டும் என்று கூறுகிறார். தாரளமாக விசாரிக்க சொல்லுங்கள். ஆனால் அதற்கு முன் பேருந்தை மிதமான வேகத்தில் ஓட்ட சொல்லுங்கள். வேகம் தான் பல இடங்களில் வாகனம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போக வழி செய்கின்றது. சமீபத்தில் இறந்த அமைச்சர் மரியம் பிச்சை உடைய காரும் அதிவேகத்தில் சென்றதாலும், முன்னாள் சென்ற லாரி ஓட்டுனர் திடீரெனெ பிரேக் போட்டதாலும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சைரன் பொருத்தப்பட்ட காரென்றால் அசுர வேகத்தில் செல்லலாம் என்றில்லை. புறப்படும் போது போதிய கால அவகாசத்தோடு செல்லுங்கள். 

நெடுஞ்சாலைகளில் எழுதி இருப்பார்கள் 

Start Early 
Drive Slowly 
Arrive Safely 
போற வேகம் என்னானு தெரியலைன்னா போற இடமும் தெரியாம போய்டும்!  
இதற்கு பல பேருக்கு அர்த்தம் தெரியவில்லையா? அல்லது படிக்கவில்லையா? என்று தெரியவில்லை. பாவம், இதை படிக்கும் வேகத்தில் தான் அவர்கள் செல்லவில்லையே? இது ஒருபுறம் இருக்க நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாமல் புறநகரிலும் (Mofussil) இதே வேகத்தோடு செல்வது பெருகிவிட்டது. தஞ்சை – கும்பகோணம் வழியில் மாதம் ஒரு விபத்து நடக்கவில்லை என்றால் பெரிய விஷயமாகி விட்டது. அந்த தடத்தில் நிறைய ஊர்கள், பள்ளி/கல்லுரிகள், வழிபாட்டு தளங்கள் இருக்கின்றன. இருந்தும் போட்டிக்காக (அரசாங்க பேருந்திடமும் சில நேரம் வேறு தனியார் பேருந்திடமும் போட்டி காரணமாக) தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தங்களுடைய கன்ட்ரோலில் தான் வண்டி இருக்கிறது என்ற தெனாவட்டிலும், பவர் ஸ்டேரிங்க், பவர் பிரேக் போன்ற நவீன வசதிகள் இருக்கும் திமிறிலும் பலரையும் பயம் கொள்ள செய்து பேருந்தை ஓட்டுகின்றனர். 

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்ல 1:30 மணி நேரம் ஆகும், ஆனால் இந்த தனியார் ஓட்டுனர்கள் மட்டும் 1:00 மணி நேரத்தில் வந்து விடுவர். வரும் வழியில் தெரிந்து சில விபத்துக்கள், தெரியாமல் இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்களை ரோட்டோரத்தில் அணைத்து விட்டு (அந்த அணைக்கறது இல்லைங்க) கீழே தள்ளிவிடுவது போன்ற பல விபத்துக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கிறது. இது பற்றி காவல்துறைக்கோ, அரசாங்கத்திற்கோ தெரியாமல் இல்லை. ஆனால் தனியார் பேருந்துகளை இயக்குவது எல்லாம் பெரிய புள்ளிகள், அவர்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியிலும் இருக்க முடியாது, அதிகாரத்திலும் இருக்க முடியாது. அப்படியே பகைத்துக் கொண்டாலும் வீட்டிற்கு சுமோ, ஸ்கார்பியோ வரும். பல இடங்களில் பேருந்தை இயக்குவதே அரசியல்வாதிகள் தானே. இதே நிலை தான் தஞ்சை – திருச்சி, தஞ்சை – பட்டுகோட்டை, தஞ்சை – மன்னார்குடி, தஞ்சை - திருவாரூர் சாலையிலும். தஞ்சை – கும்பகோணம் சாலை மிக குறுகிய சாலையாக இருப்பதாலும் இடையில் நிறைய ஊர்கள் இருப்பதாலும் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றது. 

இவர்கள் இப்படி என்றால் ஆம்ணி பேருந்து இயக்குபவர்கள் இன்னும் நவீன வசதிகள் கொண்ட பேருந்துகளை வைத்துக் கொண்டு தினமும் பயம் காட்டி கொண்டு பேருந்தை ஓட்டுகின்றனர். அவர்களுடைய பேருந்துகள் காரை போலவே பவர் ஸ்டேரிங்க் இருப்பதால் வளைத்து நெளித்து ஓட்ட முடிகிறது. ஆனால் கட்டுங்கடங்காத வேகத்தால் பல உயிர்களை பழி கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது தான் அதன் விளைவுகள் நமக்கு தெரிகிறது. பேருந்து வேகத்தை போலவே, பேருந்தின் டிக்கெட் விலையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

நான் மேலே சொன்ன விஷயம் நீங்களும் உங்கள் ஊரில் பார்த்திருக்கலாம். ஆனால் இதெற்கெல்லாம் தீர்வு என்ன என்பதை பற்றி அரசாங்கம் யோசிக்காமல் வெறும் நிவாரணத்தை மட்டும் கொடுத்து வாயடைத்து விடுகின்றது. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வேகத்திற்கான அளவுகோலை நிர்ணயம் செய்யுங்கள். மீறுபவர்களை வெறும் அபராதம் மட்டும் செலுத்த சொல்லாமல் வண்டியை சிறையில் வையுங்கள். கடுமையான சட்டத்தால் தான் தவறுகளை குறைக்க முடியும். அதை விட்டுவிட்டு ஹெல்மெட்டிற்கு தமிழ்நாட்டில் சட்டத்தை போட்டுவிட்டு அதை சரிவர நிறைவேற்றாமல் இருப்பது போல ஸ்லீப்பர் கோச்சின் தன்மையை மட்டும் ஆராயப்போவதாக சொல்வது ஏற்புடைய தீர்வு அல்ல. யோசிக்குமா அரசு?? 
விளம்பரம்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா .....
நாம் என்ன செய்யலாம்: 

நமக்கெல்லாம் அரசாங்கம் கொடுக்கும் அரிசி தேவையில்லை, ஆனால் அரசாங்கம் கொடுக்கும் டிவி வேண்டும், அரசாங்கம் இயக்குகின்ற அரசு பேருந்தில் போக மாட்டோம், ஆனால் தனியார் பேருந்தில் சென்று, அதனால் விபத்து ஏற்பட்டால் நிவாரண தொகையை வாங்கி கொள்வோம், அரசாங்கம் மாணியம் கொடுத்து விற்கின்ற பொருட்கள் நமக்கு தேவையில்லை, ஆனால் அரசாங்கம் கொடுக்கிற வேலை மட்டும் வேண்டும் என்று இருக்கிற மக்களே, இதை போன்ற விபத்தை நாமும் தவிர்க்கலாம் / தடுக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், இதை போன்ற அசுர வேகத்தொடு செல்லுகின்ற தனியார் பேருந்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் காது படவே, இந்த வண்டி அதிகமான வேகத்தில் செல்லும், அதனால் இதில் ஏற வேண்டாம் என்று கூறுங்கள். கலெக்ஷன் கம்மியானால் கட்ட வண்டி போல் ஓட்டியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுவார்கள். ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் தான் இது சாத்தியமாகும் என்றில்லை. நீங்கள் உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள், உங்கள் உறவினர்களிடத்தில் / நண்பர்களிடத்தில் கூறுங்கள். Better late than never என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்று.

தோழமையுடன்
அபு நிஹான்

ஆக்கத்தில் உதவியது:

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அபுநிஹான்.
    மிக்க நல்லதொரு ஆய்வறிக்கை. அதிலும் கடைசி பாரா சிந்திக்க வேண்டிய அம்சங்கள் நிறைந்துள்ளன.

    ReplyDelete
  2. வருத்தமான செய்தி :(

    நன்றி,
    ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

    ReplyDelete
  3. அக்கறையான பதிவு. ஆதங்கத்தில் எழுந்தது. ஜூவியில், டீசல் டேங்க் எளிதில் வெடிப்பதில்லை என்றும், அப்படியே அது வெடித்தாலும் இவ்வளவு பெரிய விபத்து சாத்தியமில்லை என்ற ரீதியில் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.

    எதுவானாலும் பலியாவது அப்பாவி மக்கள்தானே.

    ReplyDelete
  4. @முஹம்மத் ஆஷிக்: தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

    //அதிலும் கடைசி பாரா சிந்திக்க வேண்டிய அம்சங்கள் நிறைந்துள்ளன.//

    சிந்திப்பார்களா?

    ReplyDelete
  5. @ஜீஸஸ் ஜோஸப்: வருத்தமான செய்தி தான் சகோ. ஆனால் வருத்தப்படுவது, இரங்கல் தெரிவிப்பதோடு நம் கடமை முடியவில்லை என்று கூறுவதற்கே இந்த பதிவு.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  6. மிகவும் வேதனைத் தரக்கூடிய துயர் சம்பவம். ஆழ்ந்த வருத்தத்துடன் ஆழமான அழுத்தத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கொடுத்த பதிவு. விபத்துக்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நானும் கேள்விப்பட்டது, இரவு நேரங்களில் பெரும்பாலான தனியார் பேருந்துகள், ஆம்னி பஸ்கள், லாரிகளில் டிரைவர் கிளீனரிடம் வண்டியைக் கொடுத்து டிரைனிங் கொடுப்பார்களாம். இதற்கு பயணம் செய்யும் அப்பாவி மக்களின் விலைமதிப்பற்ற உயிரா விலை?

    ReplyDelete
  7. @ஹூஸைனம்மா: தங்களின் வருகைக்கும், வலுசேர்க்கும் கருத்துகளுக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  8. @வழுத்தூர் இணையம்,

    தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி சகோ யூசுஃப் அலி.

    //விபத்துக்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் நானும் கேள்விப்பட்டது, //

    நானும் கேள்விபட்டிருக்கிறேன். ஓட்டுநர்கள் சிந்திப்பார்களா?

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...