Tuesday 9 October 2012

டாக் (விவாத) ஷோக்கள் - நிஜங்களை தொலைத்த நிழல்கள்

சீரழிவின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சீரியல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சி என்று எடுத்து கொண்டால் அது டாக் ஷோக்கள் எனப்படும் விவாத நிகழ்ச்சிகள் தான்.ஆனால் சில டாக் ஷோக்கள் எந்த அளவிற்கு மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

 
டாக் ஷோக்கள் பலவகைப்படும். ஆனால் இப்போது நாம் பார்க்க போவது "ஒரு விவாத தலைப்பை வைத்து அந்த விவாத தலைப்பிற்கு உடன்பட்டு கருத்தளிப்பவர்களை ஒரு பக்கத்திலும், எதிர்த்து கருத்தளிப்பவர்களை இன்னொரு பக்கத்திலும் வைத்து மாடர்ன் பட்டிமன்றம் போல் நடத்துவார்கள்". பட்டிமன்றத்தில் சான்றோர்கள் / அறிஞர்கள் மட்டும் பேசுவார்கள். இங்கு சாமானியர்கள் மட்டுமே பேசுவார்கள் (சாமானியர்கள் தங்களுடைய பேச்சு திறமையை வளர்த்து கொள்ள சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது). சான்றோர்கள் / அறிஞர்கள் அல்லது எல்லாம் தெரிந்த (?) சினிமாக்காரர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள். இரு கருத்துடைய மக்களையும் பேச வைத்து இறுதியில் தீர்ப்பை வழங்க நாட்டாண்மை ஒருவர் இருப்பார் (சொம்பு + ஆலமரம் மட்டும் மிஸ்ஸிங் :) ). அவர் பண்ற அலப்பறை தாங்க முடியாது. தான் தான் உலகத்திலேயே ஒரே ஒரு அறிவாளி மாதிரியும், மத்தவிய்ங்கல்லாம் என்னமோ இவர் கிட்ட வந்து டியுசன் படிக்க வந்தவிய்ங்க மாதிரியும் இவர் செய்ற செட்டை இருக்கே, எப்பா !

விவாதங்கள் நடந்து முடிந்தவுடன் அந்த விவாதத்தை அப்படியே ஒளிபரப்பு செய்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி கிடைக்கும். சம்பந்தப்பட்ட தலைப்பில் எந்த பக்கம் நியாயம் உள்ளது, யாருடைய கருத்து உண்மையை சொல்லுது என்று உணர்வர். ஆனால் அப்படி செய்கிறதா இந்த டாக் ஷோக்கள் நடத்தும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள்?

எப்படி செயல்படுகின்றன?
விவாதத்தின் தலைப்பை முடிவு செய்யும் போதே விவாத தீர்ப்பையும் முடிவு செய்கின்றனர். (விவாத தீர்ப்ப முடிவு செய்வது எந்த நாட்டாம்மைன்னு தெரியல :) ) அதிலும் எல்லோரையும் பேச வைத்து விட்டு, யார் பேச்சை தொலைக்காட்சியில் காட்ட நினைக்கிறார்களோ, அதாவது யாருடைய பேச்சு தங்களுடைய தீர்ப்புக்கு சாதகமாக இருக்கிறதோ அவர்களுடைய பேச்சை மட்டும் காட்டுவது, தங்களுடைய தீர்ப்புக்கு மாற்றமாக யாராவது வாதாடினால் அவர்களின் வாதத்தை அப்படியே தங்களுக்கே உண்டான பாணியில் திசை திருப்புவது / அல்லது அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் அப்படியே வேறு விஷயத்திற்கு தாவுவது என்று பற்பல சேட்டைகளை இந்த டாக் ஷோக்களை நடத்தும் சில அதிமேதாவிகள் செய்து வருகின்றனர்.

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட சிலர் நன்றாக பேசி இருக்கிறேன், டிவியில் பாருங்கள் என்று நண்பர்களிடம் / உறவினர்களிடம் சொல்லி அந்த நிகழ்ச்சிகளை பார்க்க சொன்னால் அவர்கள் பேசியவைகளில் வெட்டியது போக ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ தான் டிவியில் காண்பித்து பல்ப் வாங்க வைப்பார்கள்.

நியாயம் அநியாயம் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் TRB rating தான். அதை வைத்து தான் காசு பார்க்க முடியும். ஆதலால் அதையே குறிக்கோளாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் செய்து வரும் அட்டகாசங்கள் அளவிட முடியாதவை. நியாயம் என்னவென்று சொல்லக்கூடிய நிலைமையில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் இல்லை. நியாயம் என்னென்வேறு சொல்லவில்லை என்றால் கூட பரவாயில்லை, அநியாயத்தை நியாயமாக சொல்வது தான் கொடுமையான விஷயம்.

முன்னெல்லாம் இது போன்ற நிகழ்ச்சிகள் பட்டி மன்றத்தில் மட்டுமே காணப்படும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், இலக்கியவாதிகளும் கலந்து கொள்வர், பல கேட்டிராத விஷயங்கள், இலக்கிய மொழியில், கதை வடிவில், நகைச்சுவையாக கேட்பதற்கு ரசிக்கும் படியாக இருக்கும்.

ஆனால் இன்றோ அது எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். புர்கா வேண்டுமா வேண்டாமா? தாலி அவசியமா கூடாதா போன்ற மத சம்பந்தமான சென்சிட்டிவான தலைப்புகளை வைத்து காசு பார்க்க நினைக்கும் சில ஊடகங்கள் அந்த தலைப்பு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட மத தலைவர்களிடமோ அல்லது வேறு பிரபலமான அறிஞர்களிடமோ கருத்து கேட்பதில்லை. தாங்கள் ரெடியாக வைத்திருக்கும் தீர்ப்பையே மக்களிடத்தில் திணிக்க பார்க்கிறார்கள். உண்மையிலேயே அக்கறையுடன் ஒரு விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படியில் செய்தால், இதை போன்ற சென்சிட்டிவான விஷயங்களை பற்றி பேசும் போது சம்பந்தப்பட்ட மத தலைவர்களை / மத அறிஞர்களை வைத்து அவர்களுடைய கருத்து என்ன என்று கேட்டு ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் மக்கள் உண்மையை விளங்கி கொள்வார்கள்.

இது போன்ற செயல்களை தொடர்ந்து தைரியமாக செய்வதற்கு நாம் தான் காரணம். இது போன்று குருட்டத்தனமான விவாதங்களாக நடைபெறும் டாக் ஷோக்களை மக்கள் புறக்கணித்தாலே வழிக்கு வந்து விடுவர். புறக்கணிப்பு என்பது பார்வையாளர்களாக புறக்கணிப்பது மட்டுமல்ல, கலந்து கொள்பவர்களும் புறக்கணித்தால் தான் மாற்றங்கள் கொண்டு வர இயலும்.

நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்( அல்குர்ஆன் 2:42)


ஏன் இந்த டாக் ஷோக்கள் மீது இவனுக்கு திடீரென்று அக்கறை என்று கேட்க நினைப்பவர்களுக்கு :  
 
தொலைக்காட்சி நிகழ்ச்ச்சிகளிலேயே அறிவுக்கு சம்பந்தமாக, ஆபாசம் இல்லாமல், பல விஷயங்களை அறிந்து கொள்ள பயன்படும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த டாக் ஷோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தினால் நிச்சயமாக நாம் சமூகத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடியும். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நிகழ்ச்சியை கையில் வைத்து கொண்டு ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகங்கள் அதை வெறும் காசு சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்துகிறதே என்ற ஆதங்கம் தான் இந்த பதிவு.

தோழமையுடன்
அபு நிஹான்

1 comment:

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...