Sunday, 22 September 2013

சத்துணவும், கை கழுவுதலும்

கடந்த சில மாதங்களாய் மூன்று வேறு சம்பவங்கள் சத்துணவினால் ஏற்பட்ட பாதிப்பை பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள். 18.09.2013 அன்று மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியிலும், 19.07.2013 அன்று நெய்வேலி என்எல்சி பள்ளியிலும், 03.01.2013 அன்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசமுத்திரம் அருகே உள்ள நாடியத்திலும் ஏற்பட்ட பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கி இருக்கிறது 

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் 

இலவச மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜரால் தொடங்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்குக் கவர்வதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியையும் மனதில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 

1955ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ. து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். 

பின்னர் எட்டையபுரத்தில் முதல் சத்துணவு திட்டம் அன்றைய முதல்வர் காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு பல கால கட்டங்களில் சத்துணவில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் வாரத்தி ஐந்து நாட்களிலும் முட்டை வழங்க அரசாணை இய்ற்றப்பட்டு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆரம்ப காலங்களில் இருந்தே பல ஊழல்கள் கண்ட சத்துணவு திட்டத்தை பற்றி நாம் அனைவரும் அறிவோம். இப்போது விஷயம் ஊழல்கள் பற்றியல்ல. ஆனால் சத்துணவு அலுவலகர்கள் முதற்கொண்டு சத்துணவு தயாரிக்கும் பணியாளர், உதவியாளர், பறிமாறும் பணியாளர் ஆகியவர்கள் எந்தளவுக்கு சுத்தமாக இருக்கின்றனர் என்பன குறித்து தான் இந்த பதிவு. 

நீங்கள் சத்துணவு கூடங்களை கண்டாலே அங்கு தயாரிக்கும் உணவை சாப்பிடும் எண்ணத்தை விட்டுவிடுவீர். அந்தளவுக்கு ஒரு மூண்றாம் தர உணவகம் ரேஞ்சில் தான் இன்று பல சத்துணவு கூடங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் அதற்காக பயன்படும் பாத்திரங்கள், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிலையை பற்றி நாம் விளக்கவே வேண்டாம் எனும் அளவிற்கு தான் பல சத்துணவு கூட பணியாளர்களின் நிலைமையும் இருக்கிறது. சில சத்துணவு கூடங்கள் / சில சத்துணவு பணியாளர்கள் விதிவிலக்காக இருக்கலாம். இது எவ்வாறு குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் என்பதை பற்றியும் சமையல் செய்பவர்கள் கூடுதலாக எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய அவா. 

பொதுவாக உணவு தயாரிக்கிறவர்கள் கையாள வேண்டிய சுத்தங்கள் என்ன, அவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்று சொல்ல நினைத்து இதை எழுதுகிறேன். 

உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர், கண்டிப்பாக நகங்களை வாரமொரு முறை வெட்ட வேண்டும். நகங்களில் அழுக்கு இருந்தால் உணவு தயாரிக்கும் போது அந்த அழுக்கு உணவில் பதிந்து பல்வேறு விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் முடிகளை முடிந்தவரை சரியாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும், மூடியது போல் தொப்பி அணிந்து கொள்வது சிறந்தது. ஏனெனில் முடிகள் உணவு தயாரிக்கும் போது கலந்தால் அதுவும் பல்வேறு விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக காய்களை நறுக்குவதற்கு கட்டைகளை வைத்து கொள்ள வேண்டும், அதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன்னு சொன்னா நமது ஊர்களில் அப்படியே தரையிலேயே காய்கறிகளை நறுக்குவதை பார்த்து இருக்கிறேன். மேலும் உணவு தயாரிப்பவர்கள் அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொற்று நோய் பிரச்சனைகள் இருந்தால் அது உணவு தயாரிக்கும் போது பரவ வாய்ப்பு உள்ளது. கைகளில் காயங்கள் ஏற்பட்டால் காயம் சரியாகும் வரை உணவு தயாரிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் அல்லது சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். சலி போன்ற தொல்லைகள், இருமல், தொடர் தும்மல், ஆஸ்த்மா இருப்பவர்கள் சற்றே கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தும்மலால் பரவும் கிருமி, சலியால் பரவும் கிருமி உணவில் கலந்தால் உடல் நிலை சரியில்லாமல் போகும். இறுதியாக மலம், ஜலம் கழித்த பிறகு உணவு தயாரிக்கும் எல்லோரும் கண்டிப்பாக சோப் போன்ற வஸ்துக்களால் உங்கள் கைகளை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். இது தான் பல நோய்கள் பரவுவதற்கு பரவலான காரணியாக இருக்கிறது.

கீழே உள்ள படத்தில் 5% சதவிகிதமான நபர்கள் தான் கழிவறையை உபயோகித்த பிறகு கைகளை சரியாக கழுவுவதாகவும், 33 சதவிகிதமான நபர்கள் தான் கழிவறையை உபயோகித்த பிறகு சோப்பு போன்ற வஸ்துக்களால் கைகளை கழுவுவதாகவும், 10 சதவிகிதமான நபர்கள் கழிவறையயை உபயோகித்த பின்னர் கைகளை கழுவுவதே இல்லை என்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வருகிறது. 



இன்னும் 39 சதவிகிதமான நபர்கள் தான் கைகளை சாப்பிடும் முன் கழுவுவதாகவும், ஆண்களில் 15 சதவிகிதமானவர்களும், பெண்களில் 7% சதவிகிதமானவர்களும் கைகளை உணவு உண்ணும் முன் கழுவ மாட்டார்கள் என்றும் தெரிய வருகிறது. 

நாம் அனைவரும் கழிவறையை உபயோகித்த பின் கையை 10 முதல் 20 வினாடிகளுக்குள் கழுவி விடுவோம். ஆனால் அப்படி செய்ய கூடாது. குறைந்தபட்சம் 2 நிமிடங்கள் செலவு செய்து கையை ஒழுங்காக கழுவ வேண்டும். இந்த காணொளியில் எப்படி கையை கழுவ வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சாப்பிடும் முன் இதே போன்று கையை கழுவி கொள்ள வேண்டும். 


இன்னும் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் 6 இல் 1 மொபைல் போனில் faecal matter எனப்படும் மனித கழிவு பொருட்கள் படிந்து இருப்பதாகவும், 26 சதவிகிதம் மனித கைகளில் படிந்து இருப்பதாகவும், 14 சதவிகிதம் ரூபாய் நோட்டுகளில் படிந்து இருப்பதாகவும் 10 சதவிகிதம் கடன் அட்டை என்று சொல்லக்கூடிய கிரெடிட் கார்டுகளில் படிந்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. இது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் செய்த ஆய்வு, இந்த சதவிகிதங்களில் மாற்றம் இருக்கும் என்றாலும் இது அனைத்தும் உண்மையே என்று சொல்ல கூடிய அளவில் தான் இன்னும் சொல்ல போனால் இன்னும் மோசமாக தான் இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் என்பதை வேதனையுடன் சொல்லி கொள்கிறேன். 

இதை பற்றிய ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட என்னுடைய நண்பர் கூறியதாவது: 

நம் மலம் / ஜலம் கழித்து விட்டு சரியான முறையில் கைகளை கழுவாமல் உணவகங்களில் வேலை செய்யும் போதோ அல்லது உணவு பதார்த்தங்களை தொடும் போதோ முதலில் தொடும் உணவு வகைகளில் அந்த கிருமியின் தாக்கம் அதிகமாக இருக்கும். பிறகு அதன் வீரியம் குறைந்து விடும். உதாரணத்திற்கு 100 குழந்தகளுக்கான உணவு தயாரிக்கப்பட்டு பார்சல் செய்யப்பட்டால் அந்த பார்சலில் உனவை சாப்பிட்ட குழந்தைகளில் சில சமயம் 20 குழந்தைகளுக்கு மட்டும் உடல் நிலை சரியில்லாமல் போகும். இதற்கு காரணம் உணவை பார்சல் செய்யும் நபர் மலம் / ஜலம் கழித்து விட்டு கைகளை சரியாக கழுவாமல் பார்சல் செய்ததினால் அவர் செய்த பார்சலில் முதல் 20 பார்சலில் மட்டும் கிருமிகள் தொற்றி நோய்களை ஏற்படுத்தி உடல்நிலை குறைவை ஏற்படுத்தும். இதை இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தால் மற்ற குழந்தைகளுக்கு ஏன் உடல் நிலை குறைவு ஏற்படவில்லை என்ற கேள்வி தோன்றும். ஆகவே உணவகங்களில் / சத்துணவு கூடங்களில் பணி புரிவோர் (உணவுகளை தயார் செய்வோர் / பாத்திரங்களை கழுவுவோர் / உணவுகளை பறிமாருவோர்) அனைவரும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அரசும் உணவகங்களில் கடுமையான சட்டம் கொண்டு வந்து வெளி நாடுகள் போல் சுத்தத்தில் குறைபாடு இருந்தால் உனவக உரிமங்களை ரத்து செய்வது, வேலையாட்கள் சுத்தமாக இல்லாவிட்டால் உணவகங்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற சட்டங்களை கொண்டு வருவதன் மூலம் இதனை இன்ஷா அல்லாஹ் சரி செய்யலாம். ஏற்கனவே உணவே மருந்து என்பது போய் இன்று மருந்தே உணவாக இருக்கிறது, இதில் நாம் உண்ணும் அந்த மருந்துணவில் சுகாதாரமும் கெட்டு விட்டால்.. 

இது உணவகங்களுக்கு மட்டும் பொருந்தாது. வீட்டில் உள்ளவர்களும் இந்த சுத்தத்தை / சுகாதாரத்தை பேணி நடந்தால் இன்ஷா அல்லாஹ் பெருமளவில் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். 

உலக கை கழுவும் தினம் என்று அக்டோபர் 15 ஆம் நாள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிது. அந்த நாளில் உலகின் பல்வேறு பகுதிகளில் கை கழுவுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள் 2001 இல் ஆரம்பிக்கப்பட்ட PPPHW (The Global Public-Private Partnership for Handwashing with Soap (PPPHW) அமைப்பினர்.


கழிவறை உபயோகித்த பின்:

சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யுங்கள். கப்ருடைய வேதனைகளில் பெரும்பாலானவை இதில் அலட்சியம் செய்வதாலேயே ஏற்படுகிறது. (நூல்கள்: இப்னு மாஜா, தார குத்னி, ஹாக்கிம்)

வலது கரத்தைக் கொண்டு பிறவி உறுப்பைத் தொடக்கூடாது. (நூல்: புகாரி)

கழிவரையில் நுழைகின்றபோது இடது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்

اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث 
''யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.'' (நூல்: புகாரி, முஸ்லிம்

கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்

غُفْـرانَك 

குஃப்ரான(க்)க (ஆதாரம் - திர்மிதி)

பொருள்:- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்

சிறு நீர் கழித்தபின் சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பவர்களின் நிலை: 

நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்) பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள் செல்லித் திரிபவராக இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - நஸாயி)

நபி(ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம் செய்தார்கள்) (ஆதாரம் - நஸாயி) 

 நன்றி : 







தோழமையுடன்
அபு நிஹான்

3 comments:

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...