Sunday 7 February 2016

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் 

நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீது மக்களின் கவனம் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் நம் பிள்ளையும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் US (அப்படின்னா உழவர் சந்தையா?) செல்ல வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைக்கும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம். 

சரி ஆங்கில வழி கல்வி படித்தவர்களால் மட்டும் தான் சாதனை செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை. தமிழ் வழி கல்வி படித்தாலும் சாதனை செய்ய முடியும் என்று சாதித்து காட்டியவர்கள் பலர். 

சரி அதை விடுங்க. இப்ப குழந்தைகள் என்ன மாதிரி சூழ் நிலைகளில் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு வாசகம் படித்து இருப்பீர்கள் அதாவது MY DAD IS MY ATM என்று. அது இப்போது மாறி MY SON / DAUGHTER IS MY FUTURE ATM. ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாக தான் வளர்க்கிறார்கள். அவர்களுக்கு வளரும் போதே சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்ப்பதால் சம்பாதிப்பதிலேயே குறியாகி பெரியவர்கள் ஆனதும் சம்பாதிப்பதற்காக வயதான பெற்றோர்களை அனாதை ஆஸ்ரமத்திலும், ஹோமிலும், முதியோர் இல்லங்களிலும் தங்க வைத்து விடுகின்றனர். அவர்கள் படிக்கும் காலங்களில் அவர்களுக்கு பெற்றோர் பிள்ளை பாசம், மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை முதலீடாக செலுத்தி இருந்தால் நீங்கள் அவர்களின் பாசத்தை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களுக்கு சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று உணர்த்தி வந்ததால் உங்களால் பணத்தை மட்டுமே அறுவடை செய்ய முடிந்தது, அவர்களின் பாசத்தை அல்ல. 



இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோர் ஒரு தனியார் பள்ளியை ஆன்லைனில் அப்ளை செய்து அனுகுகின்றனர். அங்கு அந்த குழந்தைக்கு நுழைவு தேர்வு வைக்கப்படுகின்றது. (இப்பல்லாம் பொறியியல் படிப்புக்கே நுழைவு தேர்வு இல்லையாம்J) அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் 

ABCD – ORAL & WRITING (caps & small letters) 
1-30 – ORAL & WRITING 
NUMBERS IN WORDS 1-10 (ONE, TWO…) 
Charts to identify (vegetables, fruits) 
colouring 

எல்கேஜியில் சேரும் போது நுழைவு தேர்விலேயே இவ்வளவும் கேட்டால் அந்த குழந்தை பள்ளியில் என்ன படிக்கும். உலகம் வேகமாக செல்கிறது, அதனால் நாமும் வேகமாக செல்ல வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே ஒரு நிமிடம்: 

“ஒரு 3.5 வயது குழந்தை இவ்வளவையும் தெரிந்து கொண்ட பிறகு தான் பள்ளியில் சேர போகிறது என்றால் பள்ளியில் சென்று என்ன படிக்கும், எல்கேஜி முடித்து யுகேஜி போகும் போது என்ன படிக்கும் போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.” 

இது போன்ற பள்ளிகளில் பிள்ளைகளை சக்கையாக பிழிந்து எடுத்து விடுவர். ஸ்மார்ட் பள்ளி, கேம்ப்ரிடிஜ் சிலபஸ் பள்ளி, இண்டர்னேஷனல் பள்ளி என்று சம்பாதிக்க புதிது புதிதாக பள்ளிகள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தங்களால் இயன்றளவு பிள்ளைகளை சக்கையாக பிழிந்து எடுத்து விடுகின்றனர். ஒரு 5 வயது பையனுக்கு அதற்குள்ள அறிவு தான் இருக்கும், அவனை அவனாக வாழ விடுங்கள். இல்லையேல் அவன் இறுதிவரை அவனாக வாழ முடியாமலே போய்விடும். 

நாமக்கல் இரண்டு விஷயத்துக்கு ஃபேமஸ் 

ஒன்னு பிராய்லர் கோழி 
மற்றது பிராய்லர் பள்ளி(க்கூடங்கள்) 

அடுத்து பள்ளியின் கட்டணம். நான் பள்ளி படிப்பை (matric) படித்து முடிக்க என்ன ஆனதோ அதையே எல்கேஜிக்கு சில பள்ளிகளில் கேட்கின்றனர், இன்னும் சில பள்ளிகளில் கல்லூரி படிக்க செலவு செய்ததை விட அதிகமாக எல்கேஜிக்கே கேட்கின்றனர். இருக்குறவன் இல்லாதவன் கிட்ட இருந்து வாங்குறான், இல்லாதவன் இல்லையேங்கிற விரக்தில சில பேர் பொறுத்துக்கிட்டு போறான், பல பேர் சமூக விரோதியா மாறிடுறான். 

Tution fees 
Building Construction fees 
Extra Curricular fees 
Swimming fees 
Auditorium fees 
Annual day fees 
Sports Day fees 
Flag Day fees 
Karate fees 
Dance Class fees 
Music class fees 

இன்னும் என்ன ஃபீஸ் பாக்கி இருக்குன்னு தெரியல 

இது ஒரு பக்கம்னா சந்தைகளில் மேயும் ஆடுகளை போல யாரிடமும் கலக்காமல் ஒரே பக்கமாக ஓடுவது போன்ற செயல்களில் தான் மக்கள் அதிகம் இருக்கின்றனர். நாமக்கல்லில் ஒரு பள்ளி மாநிலத்திலேயே முதலாவதாக வந்ததற்காக நாமக்கல் மாவட்ட பள்ளியையே குறி வைக்கின்றனர். அங்கு பிள்ளைகளின் வளரும் சூழ்நிலைகள் என்ன, கெட்ட பழக்கம் இல்லாதாவர்களாக வளர்கிரார்களா என்பெதல்லாம் பெற்றோர்களுக்கு முக்கியமல்ல. கோபிநாத் மகன் படிக்கிறான்ல அந்த பள்ளிகூடத்தில தான் என் பையன் படிக்கிறான் போன்ற பம்மாத்துகளுக்கு பிள்ளைகளை பலிகடாவாக ஆக்கி படிப்பை தவிர எதிலும் எதையும் சிந்திக்க விடாதவர்களாக மந்தையில் இருக்கும் ஆடுகளை போல உருவாக்கி விடுகிறார்கள். இதனால் குடும்பங்களின் அரவணைப்பு, குடும்ப சூழ்நிலைகள், கணவன் மனைவி பிரச்சனைகள், மாமியார் பிரச்சனைகள், கொடுமைகள் என்றால் என்னவென்றே அறியாமல் பிள்ளைகள் வளருகின்றனர். என்ன குடும்ப பிரச்சனைகள் பிள்ளைகளுக்கு தெரிய வேண்டுமா? அவர்களை கஷ்டம் பார்க்காமல் வளர்க்க வேண்டும் என்று கூறும் பெற்றோரா நீங்கள் அப்படின்னா சற்று கவனியுங்கள். 

பெரிய குடும்ப பிண்ணனி கொண்ட பிள்ளைகள் கூட ஹாஸ்டலில் தங்குவதால் குடும்ப சூழ்நிலை அறியாமல் போகிறது. 


அதனால் திருமணம் ஆன பிறகு தனக்கு வர போகும் கணவன், மனைவியோடு எப்படி குடும்பம் நடத்த வேண்டும் என்றே பலருக்கு தெரிவதில்லை. மாமியார் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சொந்தத்தை எப்படி அனுசரிக்க வேண்டும், யார் யாரிடத்தில் எப்படி பேச வேண்டும் என்றே பலருக்கு அறியாத சூழ்நிலையில் குடும்பத்தில் திருமணமான குறைந்த காலவரைக்குள் குடும்பத்தில் கலவரம் உண்டாகிறது. பல நேரங்களில் விவாகரத்து வரை செல்கிறது. அட தனிக்குடித்தனம் போனாலும் கணவனுக்குரிய உரிமைகள் என்ன? மனைவிக்குரிய உரிமைகள் என்ன? குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்னு அடிப்படை விஷயம் கூட இல்லாமல் பல தம்பதியர்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதுல லிவுங் டுகெதெர் வேறையாம் 

குடும்பம் என்றால் என்ன? 
விட்டு கொடுத்தல் என்றால் என்ன? 
ஈகோ என்றால் என்ன? 
கோபம் ஏன் கொள்ள கூடாது. 

குடும்பம் என்பது என்ன என்பதை நீங்கள் சொல்லி கொடுக்கா விட்டால் குடும்ப நல நீதிமன்றங்கள் திருமணத்திற்கு பிறகு கவுன்சிலிங் என்ற பெயரில் சொல்லி கொடுப்பார்கள். ஆனால் அப்போது இருவருமே கேட்கும் சூழ்நிலையில் இருக்க மாட்டார்கள். குடும்ப சங்கதிகள் பஞ்சாயத்து / கோர்ட வரை சென்றாலே வரட்டு கவுரவம் / ஈகோ போன்ற காரணங்களால் இணைந்து வாழ்தல் என்பதே கேள்வியாகி விடும். 

தன் பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து எல்லா விஷயத்தையும் தேர்ந்தெடுப்பது தவறல்ல, ஆனால் அதோடு குடும்ப சூழ்நிலைகளை பற்றி சொல்லி கொடுங்கள். இது நகரங்களில் / மாநகரங்களில் தான் அதிகம் மிஸ்ஸிங். காரணம் பிள்ளைகள் குறிப்பாக ஆண் பிள்ளைகள் எந்நேரமும் நண்பர்களோடே இருப்பார்கள். வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. திருமணமான தன் அக்கா வீட்டில் என்ன பிரச்சனை, அண்ணனுக்கு என்ன பிரச்சனை என்று கூட தெரியாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வந்தால் எப்படி சமாளிப்பது, யாரிடம் சொல்லலாம், யாரிடம் சொல்ல கூடாது, யார் நம்மீது அன்பாக இருக்கிறார்கள், யார் நாம் வீழ காத்திருக்கிறார்கள் என்பது தெரிந்து இருக்க வேண்டியது அவசியம். 

இதை ஏன் இவ்வளவு விலாவாரியாக எழுதிகிறேன் என்றால் சமீப காலங்களில் காணப்படும் விவாகரத்துகள் கணவன் / மனைவி குடும்ப சூழலில் வளராதனாலே என்பது தான். கோவம் / பிடிவாதம் / ஈகோ போன்ற கொடிய நோய்களில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றனர். 

ஆகவே குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமே சொல்லி கொடுக்கும் பள்ளியை தேர்ந்தெடுக்காமல் கல்வியோடு ஒழுக்கத்தையும் சேர்ந்து விதைக்கும் பிள்ளையை தேர்ந்தெடுத்து குடும்ப சூழ்நிலையையும் சொல்லி கொடுத்தால் நம் பிள்ளைகளின் வாழ்வு சிறக்கும். 

தோழமையுடன்
அபு நிஹான் 

1 comment:

  1. தான் விட்டதையெல்லாம் குழந்தை வைத்து பிடித்திட வேண்டும் என்பதை அன்று முதல் இன்று வரை உள்ள அதிகமான பெற்றோர்கள் நினைக்கின்றனர்
    .
    குழந்தைகளின் மழலை தொலைத்து புத்துக புழுக்களாக மாற்றி கொண்டிருக்கின்றனர்
    .
    இதை உணர்ந்து நாமாவது செயல்பட வேண்டும்

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...