Wednesday, 13 October 2010

பெரியவர்கள்

old couple - sample
“இந்த பெரிசுக்கு வேலையே இல்லை, சும்மா கட பெரிசு, எப்ப பார்த்தாலும் எம்.ஜி.ஆர் பாட்டை போடுன்னு டி.வி. போட்டாலே சொல்லும், இதுல தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி நாங்கள்ளாம் அந்த காலத்துலனு ஆரம்பிச்சுருவ” அப்படின்னு நாம் பெரியவர்களை பார்த்து சலிப்ப டைவோம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் அனுபவத்தால் பெரிய பிரச்சனை எல்லாம் மிக இலகுவாக (லோக்கல் பாஷைல சொன்னால் பெரிய பிரச்சனைலாம் சப்பையா) முடியும் போது பல நேரங்களில் பெரிசுகளின் உதவி நமக்கு தேவை தான் என்று உணர முடிகிறது. 

ஏன் இப்ப திடீரென்று பெரிசுகள பத்தி பேச்சு, வயசாயிருச்சான்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது எனக்கு காதுல விழுது. 
சிறிது வயதில் நான் படித்த கதை: ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் (கதை சொல்லனும்னு ஆரம்பிச்சா ஒரு ஊருல ஒரு ராஜா தான்னு ஆரம்பிக்கனும்னு தாமஸ் ஆல்வா எடிசன் சொல்லியிருக்காரு) அவருக்கு ஒரு மகன் (இளவரசர்) இருந்தார். இளவரசன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டிய நேரமும் வந்தது. அப்போது ராஜா இளவரசனிடத்தில் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து ஓய்வாக இருக்க எண்ணினார். பதவி ஏற்ற இளவரசர் ஆட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்தாரு, அதுல ஒரு சட்டம் ஊருல இருக்குற பெரியவர்களை எல்லாம் கொன்னு விட வேண்டும். அவர்கள் பழமைவாதிகள், புதிதாக யோசிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஊரில் உள்ள பெரியவர்களை கொலை செய்ய ஆணையிட்டான். 

அதில் ஒரே ஒருவன் மட்டும் தன் தந்தையிடம் கொண்ட அளவற்ற அன்பினால் தன்னுடைய தந்தையை காப்பாற்ற எண்ணினான். ஊருக்கு வெளியில் ஒரு வீட்டில் தந்தையை தங்க வைத்து அவருக்கு வேண்டிய தேவைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்தான். சிறிது நாட்கள் கழிந்த பிறகு அந்த நாடே பஞ்சத்தால் வாடியது. தண்ணிர் இல்லாமலும், கடுமையான வறட்சியாலும், மழை இல்லாததினாலும் நிலமெல்லாம் வெடித்து பயிர்கள் வாடி அதனால் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இளவரசர் யார் யாரிடமோ ஆலோசனை செய்தும் பிரியோஜனம் இல்லாது போனது. 

அப்போது தந்தையை காப்பாற்றியவர் தன் தந்தையிடத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் திடீர் பஞ்சம் பற்றி கூற அந்த வயதான தந்தை ஒரு ஆலோசனை கூறினார். அதாவது நாடு நல்ல நிலைமையில் இருந்த போது நெற்பயிர்கள் போரடிக்கப்பட்டு மூட்டைகளாக கட்டப்பட்டு தெரு வழியே மாட்டு வண்டிகளில் சந்தைக்கு வரும். அப்போது நிறைய நெல் மணிகள் தெருவில் சிந்தி மண்ணுக்குள் புதைந்து இருக்கும். ஆக அந்த சிந்திய நெல் மணிகளையே விதை நெல்லாக்கி தெருக்களில் உழுதால் நெற்பயிர்கள் உயிர் பெற்று முளைக்கும் என்று ஆலோசனை கூறினார். இதனை இளவரசனிடம் வயதான தந்தையின் மகன் தெரிவித்தவுடன் இளவரசர் அப்படியே செய்யுமாறு ஆணையிட்டார். உழுத சில நாட்களிலே மண்ணில் மாற்றம் ஏற்பட்டு நெற்பயிர்கள் முளைத்து நாட்டில் உள்ள பஞ்சம் தீர்ந்து நாடு பழைய நிலைமையில் செல்வ செழிப்புடன் களை கட்டியது. 

இதனால் மகிழ்ச்சியுற்ற இளவரசர் ஆலோசனை வழங்கியது யார் என்று அந்த மகனை பார்த்து கேட்க, “தன்னுடைய தந்தை தான் தனக்கு இந்த அறிவுரையை கூறினார்” என்று பயந்து கொண்டே சொன்னார். உடனே அரசர் உன்னுடைய தந்தை மட்டும் எப்படி உயிரோடு இருக்க முடியுமென ஆச்சரியத்துடன் வினவ, தான் தந்தை மீதுள்ள பாசத்தால் தன்னுடைய தந்தையை கொல்லாது மறைமுகமாக பாதுகாத்து வருவதாக கூறினார். இதனால் மனம் திருந்திய இளவரசர் “பெரியவர்களை கொன்றது தவறு என உணர்ந்து அந்த தந்தையை ஊருக்குள் அழைத்து வர சொல்லி பல அன்பளிப்புகளை வழங்கி வயதானவர்களை எல்லோரும் அரவணைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்று தன் நாட்டு மக்களுக்கு ஆணையிட்டார். 

இந்த கதை சிறு வயதில் ஆங்கில பாடப்புத்தகத்தில் படித்தது. எழுதியவர் யார் என்பது நினைவில் இல்லை. 

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தால் சொந்த ஊருக்கே செல்லாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் ஹோட்டலில் தங்கி, அங்கு வந்து பெற்றோர்களை பார்த்து விட்டு ஹோட்டலில் தனியாக அறை எடுத்து தங்க வைக்கின்றனர் சிலர். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று விசாரித்தால் “என்னுடைய பசங்க சிட்டியிலேயே வாழ்ந்து பழகிட்டாங்க, ஊருக்கு போனால் A/C இருக்காது, அப்புறம் ஒழுங்கான ரோடு இருக்காது, ஒரே pollution, அப்புறம் என் பசங்க இந்தியாவுக்கே போக வேனாம்னு சொல்லுவாங்க” அப்படின்னு காரணம் சொல்றாங்க. ஹோட்டல் பில், பஸ்/ரயில் டிக்கெட்டல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா என்று பிள்ளை தன் தாயிடம் ஏதோ வியாபாரியிடம் பேசுவது போல் சொல்கிறான். இதற்காகவா அல்லது அவன் கொண்டு வரும் பொருட்களுக்காகவா பிள்ளைகளின் வரவை பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர், இல்லை அவர்களின் அந்திமக் காலத்தில் அவர்களுக்கு வேண்டுவது பிள்ளைகளின் பாசம்/அரவனைப்பு மட்டுமே. அதைப்போல் ஓர் வீடோ சொந்த நிலமோ சொந்த ஊரில், கிராமத்தில் இருந்து விட்டால் அதை தன் பேருக்கு மாற்றி சமயம் பார்த்து விற்று விட்டு காசாக்கி அதையும் வெளிநாட்டில் முதலீடு செய்வர். இப்படி செய்வோர்கள் தங்களின் தவற்றை உணர்ந்து திருந்தவும், பெரியவர்களை மதிக்கவும் எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவனாக 

தோழமையுடன் 
அபு நிஹான்No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template