Thursday 28 October 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை - மைல்கல் - 3- கல்வியும் பெற்றோரும்

பெற்றோரும் கல்வியும்
என் மகன்/மகள் 10 ஆவது படிக்கிறான்(ள்), 12 ஆவது படிக்கிறான்(ள்). அவன்(ள்) இஷ்டத்திற்கு விட்டுட்டேன், அவன்(ள்) என்ன படிக்குனும்னு ஆசைப்படுறானோ(ளோ) அதையே படிக்கட்டும்னு நம்ம பெற்றோர்கள் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இது அவர்கள் கல்வி கற்காததால் வந்த பிரச்சனை. கல்வி கற்காமல் போனதற்கு நாம் அவர்களை குறை கூற முடியாது. ஆனால் இது பற்றி கல்வி கற்றவர்களிடம் ஆலோசனைக் கேட்கலாம். இது கேட்காமல் போனால் பிள்ளைகளை சரியான பாதைக்கு வழிகாட்டாமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் ஆகிவிடுவர். 

சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்ற நபிமொழியில் உலகக் கல்வியின் அவசியத்தை நாம் அறியலாம். 

நம் சிறிது வயது குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு மார்க்கக் கல்வியோடு, இவ்வுலகக் கல்வியை வழங்குவது பெற்றோர்களுடைய கடமை. அதை நிறைவேற்றத் தவறும் போதோ அல்லது அவன் படிப்பில் கவனம் செலுத்தத் தவறும் போதோ அவனை கண்டிக்காமல் “அவனுக்கு படிப்பு ஏற மாட்டேங்குது, அவன் என்னத்த பண்ணுவான்” என்று பெற்றோர்களே பிள்ளைகளுக்கு வக்காலத்து வாங்குவது பல இடங்களில் நடக்கிறது. 1990 வரை பிள்ளைகள் படிக்காவிட்டால் அவர்களை அடித்து “நன்றாக படிக்க வேண்டும் இல்லையென்றால் நீ வீட்டில் இருக்க கூடாது” என்று மிரட்டி படிக்க வைத்து விடுவர். ஆனால் இன்றோ பல இடங்களில், மேலே சொன்னது போல் குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதற்கு பெற்றோர்களும் காரணம் ஆகிவிடுகின்றனர். சில பெற்றோர்களுக்கு செல்லத்துக்கும், பாசத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. 

  • தங்களுடைய குழந்தைகள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள், விளையாட்டிலா? படிப்பிலா? படிப்பில் ஆர்வம் என்றால் எதை விரும்பி படிக்கிறார்கள் அல்லது எது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூர்மையாக கவனித்து சரியான பாதையில் குழந்தைகள் பயனிக்க பெற்றோர்கள் உதவ வேண்டும். விளையாட்டில் என்றால், எந்த விளையாட்டில் சிறந்து விளங்குகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். 
  • குழந்தைகளுடைய அன்றாட வருகை பள்ளியில் சரியாக இருக்கிறதா? 
  • ஒழுக்கத்தில் குழந்தைகள் எப்படி சிறந்து விளங்குகிறார்கள்? 
  • யாருடன் நட்பாக இருக்கிறார்கள்? 
  • ஆசிரியப் பெருந்தகைகளுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறார்கள்? 
  • பொது மேடைகளில், அல்லது வகுப்பறையில் கூச்ச சுபாவத்தோடு இருக்கிறார்களா? அல்லது தைரியமாக Group Discussion போன்றவகளில் கூச்சம் இல்லாமல் பேசுகிறார்களா? 
  • ஆங்கில அறிவு எப்படி இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை பெற்றோர்கள் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். 
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விரும்புவதையே தன் குழந்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு தன் குழந்தை இஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்படும் பெற்றோர்கள், குழந்தைகள் அந்த படிப்பை விருப்பப்பட்டு படிப்பார்களா? என்று யோசிப்பதில்லை. அதை பிள்ளைகளிடம் கலந்தாலோசிப்பதுமில்லை. சில குழந்தைகளுக்கு கணிதம் சரியாக வராது, அந்த குழந்தைகளை இஞ்சினியரிங் படிக்க வைத்தால் குறைந்தது ஆறு அரியரோடு நான்கு வருடத்தை கஷடப்பட்டு முடிக்கலாம். முடித்தது மட்டுமல்லாமல் பிடிக்காமலே படித்ததனால் அதன் பிறகு வேலையையும் பிடிக்காமலே செய்வான். இதனால் அவனுடைய எதிர்காலம் வீணாவதோடு அவனுடைய மனமும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படும். குழந்தைகள் எதை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அதைப் பற்றி பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்தாலோசித்து எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும். தங்களுக்கு அதை பற்றிய ஞானம் இல்லாத போது படித்த குடும்ப சொந்தங்களிடம், குடும்ப நண்பர்களிடம் கேட்டு அதன்படி செயல்படுத்த வேண்டும். 

நாங்கள் தான் படிக்கவில்லை, கஷ்டப்படுகிறோம், அதனால் எங்கள் பிள்ளையை படிக்க வைக்கிறேன் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு அத்தோடு தங்களுடைய வேலை முடிவதில்லை, அவனை, அவனுடைய செயல்களை கவனித்து, கணிவோடு அவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒரு நல்ல மனிதராக உருவாக்கும் வரை பெற்றோர்களின் கவனம் பிள்ளைகளின் மீது இருக்க வேண்டும். சில இடங்களில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் வேண்டுவதை கொடுத்தால் தான் பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று பிளாக் மெயில் செய்கின்றனர். உதாரணத்திற்கு, +2 வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் எனக்கு பைக் வாங்கி தருவீர்களா? மொபைல் வாங்கி தருவீர்களா? என்று பிள்ளைகள் பெற்றோரிடம் கோரிக்கையாக வைக்காமல் பிளாக் மெயில் போல் கேட்கின்றனர். இதனால் படிக்கின்ற வயதில் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த தவறுவதோடு தவறான பாதைக்கும் செல்கின்றனர். 

+2 வில் நன்றாக படிக்கும் பலர் கல்லூரி சேர்ந்ததும் சரியாக படிப்பதில்லை. ஏன் என்று பெற்றோர்கள் யோசிப்பதில்லை. பிள்ளைகள் படிக்க கடினமாக இருக்கிறது என்று சொல்வதை பெற்றோர்கள் நம்பாமல் எதனால் படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டது என்று யோசிக்க வேண்டும். Video Game, I-pod, PSP, Play Station, போன்றவைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலத்தை மனதில் கொண்டு கேட்கின்ற பொருட்களை எல்லாம் வாங்கி கொடுக்காமல் தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும். 

குறிப்பு: பெரும்பாலான இடங்களில் ஆண்பாலை குறிக்கும் விதமாக விவரிக்கப்பட்டாலும், இருபாலாருக்கும் (மாணவ/மாணவியருக்கும்) இந்த கட்டுரை பொருந்தும்.

தொடரும்…

தோழமையுடன்
அபு நிஹான்

4 comments:

  1. //Video Game, I-pod, PSP, Play Station, போன்றவைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.//

    ரொம்பச் சரி; இதுகூட மொபைலையும், டிவியையும் அளவோடப் பயன்ப்டுத்தணும்கிறதையும் சேத்துக்கோங்க. தவிர்க்கவே முடிஞ்சா நல்லது!!

    //அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் //

    பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, பிள்ளைகளுக்கும் இந்த வயதில் முடிவெடுப்பது சிரமம்தான்; அதனால் தக்க ஆலோசனை பெறுதல் அவசியம்.

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி,

    மறந்ததை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

    பிள்ளைகளின் கடமையைப் பற்றி அடுத்த பதிவில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். இறைவன் நாடினால் எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. தங்கள் மீது சலாம் உண்டாவதாக...
    உபயோகமான நல்ல தொடர்... சகோ.
    இன்னும் நிறைய எழுதுங்கள்.

    //நல்ல மதிப்பெண் எடுத்தால் எனக்கு பைக் வாங்கி தருவீர்களா? மொபைல் வாங்கி தருவீர்களா?//--இதற்கு வேலை வைக்காமல் பெற்றோர்களே ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான பயனுள்ள நல்ல பரிசுப்பொருளை நல்ல மதிப்பெண் வாங்கினால் தந்துவிடலாம். இது நல்ல ஊக்கமாய் அமையும். நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் பரிசு கிடைக்கும் என்றால் நன்றாக படிக்கலாம்தானே பிள்ளைகள்? மறுப்பதில் என்ன இருக்கிறது?

    ReplyDelete
  4. அலைக்கும் சலாம் ஆஷிக் பாய்.

    //இதற்கு வேலை வைக்காமல் பெற்றோர்களே ஏதாவது ஒரு ஆக்கப்பூர்வமான பயனுள்ள நல்ல பரிசுப்பொருளை நல்ல மதிப்பெண் வாங்கினால் தந்துவிடலாம். இது நல்ல ஊக்கமாய் அமையும். நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் பரிசு கிடைக்கும் என்றால் நன்றாக படிக்கலாம்தானே பிள்ளைகள்? மறுப்பதில் என்ன இருக்கிறது?//

    பெற்றோர்களாக ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்கள் முந்தி கொண்டு எனக்கு வாங்கி தந்தால் தான் பாஸாகுவேன்,என்று தேவையில்லாத பொருட்களை கேட்கும் போதும், தங்களுடைய தகுதிக்கு மீறிய பொருட்களை கேட்பது பற்றி தான் நான் எழுதியிருக்கிறேன்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...